தேர்தல் நிலைப்பாடு வேறு. மக்களுக்காகப் போராடுகிற களம் என்பது வேறு. இரண்டையும் குழப்ப வேண்டாம் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த, திருமாவளவன், “கள்ளக்குறிச்சி மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த கைம்பெண்கள் கண்ணீர் மல்க விடுத்த கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பு மக்களின் குரலாக மாற வேண்டும் என்ற அடிப்படையில் மது ஒழிப்பு மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டை நடத்துகிறோம்.
இந்த மாநாட்டில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. காந்தியடிகளின் பிறந்தநாளில் அக்டோபர் 2ஆம் தேதி அன்று இந்த மாநாடு நடத்தத் தேர்வு செய்துள்ளோம். ஜாதி மதம் மற்றும் அரசியல் கட்சியைக் கடந்து தாய்மார்கள் இந்த மாநாட்டிற்கு பேராதரவைத் தர வேண்டும். கலைஞர் 2009 விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகம் சமூக நீதி மற்றும் சமத்துவம் போன்ற கொள்கை தளங்களில் இணைந்து இயங்குகிற இயக்கங்கள்.
இது திமுக அரசுக்கு எதிரான மாநாடு, திமுக அரசுக்கு நெருக்கடி தருகிற மாநாடு என்று பலரும் விமர்சித்தாலும் கூட அதைப் பொருட்படுத்தாமல் இந்த கருத்திலே எங்களுக்கும் முழுமையான உடன்பாடு உள்ளது. களத்தில் நிற்போம் என்று திமுக முன் வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தருகிறது. தோழமை கட்சிகளைச் சார்ந்த மகளிர் அணித் தலைவர்களை மாநாட்டுக்கு அழைக்க முடிவு செய்துள்ளோம்.
தமிழ்நாட்டில் முழுமையாக மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். அதற்கு படிப்படியாகக் கடைகளை குறைப்பது, இலக்கை குறைப்பது, பிறகு முற்றிலுமாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது. இதனை தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வைக்க உள்ள கோரிக்கை. அதேபோல இந்திய ஒன்றிய அரசுக்கும் கோரிக்கை வைக்கிறோம்.
1974 இல் மது கடைகளை மூடி தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கை வேண்டும் என்று கலைஞரும் வலியுறுத்தியுள்ளார். திமுகவுக்கு இப்படி ஒரு பாரம்பரியம் இருக்கிறது என்பதை இன்றைய திமுக தலைவரின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளோம். அதன் அடிப்படையில் தான் இந்த மாநாட்டில் பங்கேற்க இசைவளித்துள்ளார்கள்.
மதுவிலக்கை தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ஒருமித்த கருத்து அடிப்படையில் கொண்டு வர வேண்டும்.1955 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மதுவிலக்கு ஆலோசனை குழு பரிந்துரையை வழங்கியுள்ளது. முதல்வரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில் பல்வேறு விஷயங்களைக் கூறியுள்ளோம். அதனைப் படிக்காமல் எதிர்மறையாக விமர்சித்து வருகிறார்கள். ஏனெனில் அவர்கள் நினைத்தது எதிர்பார்க்கவில்லை என்பதால் தான்.
தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களுக்கு மேல் இருக்கிறது.1999 ஆம் ஆண்டு தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியலில் அடியெடுத்து வைத்த போது ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கோரிக்கையை வைத்தது. அதில் ஒரு நிமிட வீடியோவை தான் என்னுடைய சமூக வலைதளத்தில் தோழர்கள் பதிவிட்டுள்ளார்கள். முறையான கன்டென்ட் அதில் பதிவிடப்படாததால் நீக்கப்பட்டது. அதை ஊடகங்கள் ஊதி பெரிதாகியதால், எப்படி பதிவிடுவதில் என்பதில் ஏற்பட்ட தடுமாற்ற சூழலில் தோழர்கள் என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் அதைப் பார்த்த பிறகு உடனே பதிவிட செய்தேன். அதையும் ஊதி பெரிதாக்குகிறார்கள்.
தேர்தல் நேரத்தில் தான் தேர்தல் பற்றிய முடிவுகளை எடுப்போம். இப்போது சமூக உணர்வோடு செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். தேர்தல் நிலைப்பாடு வேறு. மக்களுக்காக போராடுகிற களம் என்பது வேறு. இரண்டையும் குழப்ப வேண்டாம் என்பதை முதல் நாள் பேட்டியிலேயே சொல்லிவிட்டேன். அதையுமே சிலர் பார்க்காமல் பலர் விமர்சித்து வருகிறார்கள். அது அவர்களின் வன்மத்தை வெளிப்படுத்துகிறது. ஆகவே திட்டமிட்டதுபோல் எங்களின் மாநாடு நடைபெறும்” என்று பேசினார்.
தொடர்ந்து, ‘முதல்வரும் திருமாவளவனும் நாடகமாடுகிறார்கள்; டி ஆர் பாலு மற்றும் ஜெகத்ரட்சகன் போன்றோர் ஏன் மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளாரே..? என்ற கேள்விக்கு, “அவர்கள் எதிர்பார்ப்பு நடக்கவில்லை. கட்சியில் இருப்பவர்கள் எல்லாரும் கலந்து கொள்ள முடியும். அவர் விரும்பும் நபரெல்லாம் கலந்து கொள்வார்களா என்ன?” என்றார்.
திமுகவினரை மேடையில் வைத்துக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் எப்படி பேச முடியும் என்று தமிழிசை விமர்சித்துள்ளாரே என்று கேட்டதற்கு, “அவர்களால் முடியாது. எங்களால் முடியும். ஈழத்தமிழர் பிரச்சனைகள் குறித்து முத்தமிழறிஞர் கலைஞரை வைத்துக்கொண்டு மேடையில் பேசியிருக்கிறேன். இதை ஏன் பேசுகிறீர்கள் என்று கலைஞர் ஒருநாளும் கேட்டது கிடையாது. திமுக கூட்டணியில் இருக்கின்ற பொழுது அதிமுக கூட்டணியில் உள்ளவர்களோடு பயணித்திருக்கிறேன். திமுக கூட்டணியில் இருந்த போது மற்ற கூட்டணியில் உள்ள தலைவர்களோடு கைகோர்த்து பயணப்பட்டேன். எனக்கு அந்த துணிச்சல் இருக்கிறது. என்னால் பேச முடியும், அவ்வளவுதான்” எனப் பதிலளித்தார்.
தூதரகம் மற்றும் கலை பண்பாட்டு மையங்களில் தமிழாசிரியர் பணிக்கு இந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாயம் என்று மத்திய அரசு கூறியுள்ளதே என்ற கேள்விக்கு, “அவர்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். இந்தியை திணிக்க வேண்டும். இந்தியாவை ஒட்டுமொத்தமாக இந்தி பேசக்கூடிய தேசமாக மாற்ற வேண்டும். அயல் நாடுகளில் இருந்தாலும் அவர்கள் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள். சனாதனத்தை திணிப்பதாக இருந்தாலும் சரி சமஸ்கிருதத்தை திணிப்பதாக இருந்தாலும் சரி அவர்களின் செயல் திட்டத்தில் உறுதியாக இருக்கிறார்கள்” என்றார்.
சிறுத்தையாக சீரிய திருமாவளவன் முதல்வரை சந்தித்த பிறகு சிறுத்து போய்விட்டார் என்று தமிழிசை கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “அவர்கள் எதிர்பார்த்தது நடக்காததால் ஏமாற்றத்தினால் விரத்தியில் அவ்வாறு பேசுகிறார்கள்” எனப் பதிலளித்தார்.