தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு சில ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் பட்டியலை அளித்தனர். இந்தக் கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, இளைஞரணிச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்ட கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சிலர் கூறுகையில், தேர்தல் முடிவுகள் வெளிவந்து எல்லாக் கட்சிகளும் ஆலோசனை நடத்தி விட்டன. ஆனால் தேமுதிக தலைமை நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டவில்லை. திடீரென இன்று கூட்டியுள்ளனர். அவர்கள் பெற்ற கடன் விவகாரம் வெளியே தெரிந்ததால் இந்தக் கூட்டத்தை கூட்டியுள்ளனர். கடன் வாங்குவது அவர்களது தனிப்பட்ட பிரச்சனை அதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை.
2005ல் தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கினார். 2006 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டு மாநிலம் முழுவதும் சுமார் 27 லட்சம் வாக்குகளை பெற்றது. விருதாச்சலத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றார். ஓராண்டிலேயே தேமுதிக 8.38 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது. 2009 மக்களவை தேர்தலில் 10.3 சதவிகித வாக்குகளை பெற்றது. 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வென்று, விஜயகாந்த் எதிர்க்கட்சித்தலைவர் ஆனார். கூட்டணி என்பதால் குறைவான தொகுதியில் போட்டியிட்டதால் அக்கட்சியின் வாக்கு சதவிகிதம் 7.9 ஆக சற்று குறைந்தது.
ஜெயலலிதாவுடன் மோதல் ஏற்பட்டது. பின்னர் தேமுதிக எம்எல்ஏக்களை ஜெயலலிதா அதிமுகவுக்கு இழுத்தார். இதில் விஜயகாந்த் மனமுடைந்தார். 2014 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று தேமுதிக போட்டியிட்ட 14 இடங்களிலும் தோல்வி அடைந்தது. வாக்கு வங்கியும் 5.1 ஆக குறைந்தது.
2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்தும் இணைந்து கொண்டார். 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்தும் தோல்வி அடைந்தார். 5.1 சதவிகிதமாக இருந்த தேமுதிகவின் வாக்குவங்கி 2.39 சதவிகிதமானது. இதற்குப் பின்னர் பிரேமலதாவின் கட்டுப்பாட்டுக்குள் தேமுதிக முழுமையாக வந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகளை கொடுத்தனர். நான்கு இடங்களில் தேமுதிக தோல்வி. 2016-ல் 2.39 சதவிகிதமாக இருந்த தேமுதிகவின் வாக்குவங்கி தற்போது 2.19 ஆக குறைந்துள்ளது. ஒப்பீட்டின்படி கடந்த 2009 தேர்தலில் 10.3 சதவிகித வாக்குகளை பெற்றிருந்த தேமுதிக 10 ஆண்டுகளில் 2.39 சதவிகித வாக்குகளை பெற்று சுருங்கியுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் ஆலோசனைக் கூட்டம் கூட்டினார்கள். ஆனால் எங்கள் தலைவர் விஜயகாந்த் வரவில்லை. உடல்நிலை சரியில்லை என்றால் எங்களையாவது வீட்டிற்கு வரவழைத்து அவரை சந்திக்க ஏற்பாடு செய்திருக்கலாம். அதுவும் செய்யவில்லை. எங்கள் தலைவர் எங்களிடம் எதுவும் பேசவில்லை என்றாலும், கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் பின்னடைவை சந்தித்தபோதிலும் அவருக்காக இன்னும் கட்சியில் இருக்கும் எங்களை அவருடன் பேச வைத்தால் எங்கள் மனக்குமுறலை கொட்டியிருப்போம். தலைவரை சந்திக்கணும், ஏற்பாடு பண்ணுங்க என்றோம். நாங்க கட்சியில இருக்கணும்னா தலைவரை கண்ணுல காட்டுங்க என்றோம். எந்த பதிலும் இல்லை. நாங்கள் இந்தக் கட்சியில் இருப்பதா வேண்டாமா என்று எங்களுக்கே தெரியவில்லை.
நீங்க பேப்பர்ல பாத்திருப்பீங்க, சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த மாது என்ற பெண்மணி, 2006ஆம் ஆண்டு வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு தோற்றார். இதையடுத்து 2011ஆம் ஆண்டு நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு 10 லட்சம் ரூபாய் அளவுக்குக் கடன் சுமை வந்தது. தற்போது அந்த கடனை அடைக்க பெட்டிக்கடையும், கரும்புச்சாறு விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில்தான் தேமுதிக நிர்வாகிகள் உள்ளனர். இதனை பலர் வெளியே சொல்லவில்லை, அவ்வளவுதான். நாங்கள் இனி கட்சி நிதியை திரட்டி கொடுக்க முடியாது. இந்தக் கட்சியில் நாங்கள் இருப்போமா இல்லையா என்பது உள்ளாட்சி தேர்தல் வரும்போதுதான் தெரியும் என குமுறினர்.