சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்தியமைச்சருமான ப.சிதம்பரம் எம்.பி., "இந்தியாவில் குடியுரிமைச் சட்டம் கொண்டுவந்தால் போராட்டம் வெடிக்கும். இந்தியாவில் குடியுரிமைச் சட்டம் என்பது மதக்கலவரத்தைத் தூண்டிவிடும் சட்டம். தமிழக மக்களின் விரோத கட்சி பா.ஜ.க; பா.ஜ.க.வுடன் எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் தோல்வியைதான் சந்திக்கும். அ.தி.மு.க.வின் சார்பில் அரசு பணத்தில் விளம்பரம் கொடுப்பது தோல்வி பயத்தில்தான். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து பேசியதை விட என்னைப் பற்றி பேசியது தான் அதிகம்.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரைவார்ப்பது போல் மோசமான நடவடிக்கை எதுவும் இல்லை. பல லட்சம் அரசு வேலைகள் காலியாக உள்ளன; அதனை நிரப்ப என்ன வழி எனக் கேட்டதற்கும் பதில் இல்லை. 12 கோடி பேர் இந்தாண்டு வேலை இழந்துள்ளனர்; புலம்பெயர் தொழிலாளர்களுக்கு என்ன செய்திருக்கிறது மத்திய அரசு?, பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 90- ஐ தாண்டியுள்ளது; இது குறித்து பட்ஜெட்டில் ஒரு உரைகூட இல்லை. ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 5,000 வழங்க வேண்டும் எனச் சொல்கிறோம்; மத்திய அரசு மறுக்கிறது" என்றார்.