எதிர்வரும் மக்களவை தேர்தலில் விசிக ஆந்திரபிரதேசம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிடுவதாக அதன் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
திமுக வுடன் கூட்டணியில் தமிழகத்தின் 2 தொகுதிகளில் விசிக போட்டியிடுகின்றன. அதன்படி சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் தனி சின்னத்தில் போட்டியிடுகிறார். மற்றொரு தொகுதியான விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் ரவிக்குமார் போட்டியிடுகிறார். அதன்படி தற்போதைய நிலையில் 23 இடங்களில் திமுக கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. அதேநேரம் அதிமுக கூட்டணி 20 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் ஆணையத்திடம் மோதிரம், வைரம், பலாப்பழம் உள்ளிட்ட சின்னங்களை விசிக சார்பில் கேட்டோம். ஆனால் அவர்கள் சின்னம் ஒதுக்குவதில் தொடர்ந்து தாமதம் செய்து வருகின்றனர். மேலும் சின்னம் என்பது வெற்றிவாய்ப்பை நிர்ணயிப்பது இல்லை. எனவே நான் தனி சின்னத்தில் போட்டியிடுகிறேன். மேலும் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக எந்த நிர்பந்தமும் செய்யவில்லை. விழுப்புரம் தொகுதியை இழந்துவிடக் கூடாது என்ற ராஜதந்திர அடிப்படையிலேயே விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம்" என கூறினார்.