தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஆங்காங்கே இருக்கும் தலைவர்களின் சிலைகள் துணியால் மூடி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் (01.04.2021) கள்ளகுறிச்சி அருகே அண்ணா சிலை, மர்ம கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தைக் கண்டித்தும், தீ வைத்த கும்பலைக் கைது செய்யக் கோரியும் திமுகவினர் சிலைக்கு முன்பு ஆர்பாட்டம் செய்தனர். இதனைக் கண்டிக்கும் விதமாக பல கட்சித் தலைவர்களும் கண்டன அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.
அதில் விசிக கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது, “கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி என்னும் கிராமத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலையை சனாதனப் பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்துள்ளனர். அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மாதவச்சேரி கிராமத்தில் பொதுமக்களால் அமைக்கப்பட்டிருக்கும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலை, தேர்தல் நடத்தை விதிகளின் காரணமாக துணியால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அந்தத் துணியின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீ வைத்துள்ளனர். தந்தை பெரியார் சிலையையும், திருவள்ளுவர் சிலையையும், அண்ணா சிலையையும் சேதப்படுத்தும் போக்கு தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
திராவிட இயக்கத்தையும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரையும் சனாதன சக்திகள் தொடர்ந்து இழிவுபடுத்திப் பேசி வருகின்றனர். அண்ணாவின் பெயரால் கட்சி நடத்துகிற, அவரது உருவப்படத்தை கொடியில் வைத்திருக்கிற அதிமுகவினர், இந்த சனாதன பயங்கரவாதிகளுக்குத் துணை போவது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தேர்தல் நேரத்தில் அமைதியை சீர்குலைக்கும் விதமாக, வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சனாதன சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதற்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என வலியுறுத்துகிறோம் என்று அவர் அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தார்.