
இசைஞானி இளையராஜாவின் முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வருகிற 8ஆம் தேதி (08.03.2025) நடைபெறவுள்ளது. இதனையொட்டி இளையராஜாவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் லண்டன் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த இசையமைப்பாளர் இளையராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் 'இந்த புதிய சிம்பொனியை வெளியிடுவதற்காக உலகிலேயே தலைசிறந்த இசைக்குழு வாசித்து ரசிகர்கள் எல்லாம் கேட்டு மகிழ்ந்து இந்த இசையை வெளியிட இருக்கிறோம். வரும் எட்டாம் தேதி இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை'' என்றார்.
செய்தியாளர்களைக் கேள்விகளை கேட்க, 'நல்ல நிகழ்ச்சிக்காக போய்க் கொண்டிருக்கிறேன். நல்ல மனசோடு வந்திருக்கிறீர்கள். இடைஞ்சலான கேள்விகள் கேட்காதீர்கள். எல்லோரும் வாழ்த்தி நல்லபடியாக இந்த நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். இது என்னுடைய பெருமை அல்ல இது நாட்டினுடைய பெருமை. இந்தியாவின் பெருமை. இன்க்ரிடபிள் இந்தியாவை போல் இது இன்க்ரிடபிள் இளையராஜா. நான் என்னுடைய வேலையில் மட்டும் தான் கவனமாக இருப்பேன். நீங்கள் உங்களுடைய வேலையில் கவனமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எல்லாம் சேர்ந்துதான் நான். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்'' என்றார்.