2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளை தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஓரிரு தினம் முன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அதிமுக பாஜக கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடுகள் குறித்தும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. டெல்லி சந்திப்பிற்கு முன் வரை அதிமுக தலைவர்களுக்கும் பாஜக தலைவர்களுக்கும் இடையே பனிப்போர் நடந்து வந்த சூழலில் டெல்லி சந்திப்பிற்குப் பின் கூட்டணி தொடரும் என்று கூறினார். கட்சியின் இரண்டாம் மூன்றாம் கட்ட தலைவர்களும் பாஜக விவகாரத்தில் முன்பு இருந்ததை விட தற்போது பொறுமை காக்கின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தூரில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கர்நாடகாவில் பாஜக கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது ஒரு துயரமான நிகழ்வு. தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதை அதிமுக கண்டிக்கிறது.
சீட்டு கேட்கிறவர்கள் அதிகமான சீட்டுகளை கேட்பார்கள். கொடுப்பது அதிமுக தான். எங்கள் தலைமையில் இருக்கும் போது நாங்கள் தான் கொடுக்க வேண்டும். கேட்பவர்கள் 40 தொகுதிகளையும் கேட்கலாம். கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் எந்த கட்சிக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்த பின் முடிவு செய்வார்” எனக் கூறினார்.