நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது என்று செய்தி வந்தபோது மகிழ்ச்சியடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இடைத்தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்வதில்தான் அதிக ஆர்வம் காட்டினார். திமுக 9 இடங்களை நழுவ விட்டத்தை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும் மத்தியிலும் ஆட்சி மாற்றம் நடக்கவிலலை என்பதும் எதிர்பார்ப்பை தகர்த்துவிட்டது.
முன்பைவிட வலிமையாக மத்தியில் மோடி உட்கார்வதால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதிமுகவை அசைக்க முடியாதோ என்கிற சந்தேகமும் திமுக தலைவர்களுக்கு எழுந்தது. இந்த நிலையில்தான் இன்னும் 3 மாதங்களுக்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கவில்லையெனில் எடப்பாடி ஸ்ட்ராங்க் ஆகிவிடுவார் என கட்சியின் சீனியர்களும் எம்எல்ஏக்களும் விவாதித்துக்கொண்டனர். இந்த விவாதம் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்தச் சூழலில், தளபதிக்கு சம்மதம் எனில் அதிமுகவை என்னால் உடைக்க முடியும் என திமுகவின் தேர்தல் வியூகத்தை கவனித்த ஓ.எம்.ஜி. அமைப்பிடம் சொல்லியிருக்கிறார் செந்தில் பாலாஜி. அதேபோல, அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் என்னிடம் நல்ல தொடர்பில் இருக்கின்றனர் என ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்.
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் அமைச்சர் பதவி, வாரிய பதவி கிடைக்காமல் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கின்றனர். அமைச்சர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமியோடு முரண்பட்டு நிற்கின்றனர். அதனால் எம்எல்ஏக்களிடம் பேசினால் நம் பக்கம் வர தயங்க மாட்டார்கள். நம்மிடம் வந்த செந்தில் பாலாஜிக்கு கட்சி பதவியும், தேர்தலில் சீட்டு தந்து ஜெயிக்க வைத்திருப்பதும் அதிமுகவினருக்கு நம் மீது நல்ல அபிப்ராயத்தை தந்திருககிறது.
அதனால் தேவையான அளவில் அதிமுக எம்எல்ஏக்களை நம் பக்கம் இழுப்பதன் மூலம் இந்த ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டலாம். இதனை செய்யாமல் அமைதியாக இருந்தால் அடுத்த இரண்டு வருடமும் அதிமுக ஆட்சிதான் என்கிற விசயங்களை ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு போயிருக்கிறார்கள் சீனியர்கள். இதற்கு ஸ்டாலின் க்ரீன் சிக்னல் தர, மிஷன்-15 என்கிற ஆபரேஷனை துவங்கியிருக்கிறது திமுக என்று சுட்டிக்காட்டுகிறார்கள் சீனியர்களுக்கு நெருக்கமானவர்கள்.
மிஷன்-15 குறித்து விசாரித்தபோது, அதிமுக எம்எல்ஏக்களை திமுகவுக்கு கொண்டு வந்து அதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க வேண்டுமானால் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் தேவை. அதன்படி கணக்கிட்டால் 82 பேர் வேண்டும். 82 பேர் திமுகவை ஆதரித்தால் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்படி அவர்களின் பதவிகள் பறிபோகாது. ஆனால் 82 எம்எல்ஏக்களை இழுப்பது நடக்கிற காரியமல்ல. அதனால் 15 எம்எல்ஏக்களை குறிவைத்துள்ளோம். அவர்கள் சிக்கியதும் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திடடம். அப்போது நடக்கும் வாக்கெடுப்பில் அந்த 15 பேரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் அல்லது அன்றைய தினம் அவர்கள் சபைக்கு வரமாட்டார்கள் அல்லது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிடுவார்கள். இதனால் அவர்களின் பதவி பறிபோகும்.
இதனையடுத்து வரும் இடைத்தேர்தலில் அவர்களுக்கே சீட் தந்து திமுகவை ஜெயிக்க வைத்து ஆட்சியை கைப்பற்றுவதற்றுவதுதான் மிஷன்-15 திட்டம். அதாவது தமிழகத்திற்கு பொதுத்தேர்தல் நடக்கும்போது திமுக ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதே சீனியர்களின் விருப்பம். இந்த திட்டம் திருச்சி நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில்பாலாஜி ஆகியோரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிமுக எம்எல்ஏக்களிடம் அவர்கள் பேசி வருகின்றனர். தற்போது 7 எம்எல்ஏக்கள் திமுகவிடம் வீழ்ந்திருக்கிறார்கள். விரைவில் மிஷன்-15 சக்சஸ் ஆகும். மூன்று மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும் என விவரிக்கிறது திமுக தரப்பு.