ஐஐடி உட்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்தியில் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. திமுகவின் இளைஞரணி செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 10 மணிக்கு துவங்கிய இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தின் காரணமாக காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக மாணவரணி செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், “இந்தி திணிப்பை எதிர்த்து ஆட்சியில் அமர்ந்தது திராவிட முன்னேற்ற கழகம். ஆளும் கட்சி என்பதால் மட்டுமே இந்தியை எதிர்க்கவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தோடு ஏதோ கோஷமிட்டோம், எதிர்ப்பு தெரிவித்தோம் கலைந்துவிட்டோம் என்று நாங்கள் கண்டிப்பாக இருக்க மாட்டோம்.
நீங்கள் எந்த வழியில் இந்தி திணிப்பை கொண்டு வந்தாலும் எங்களது ஒரே பதில் ’இந்தி தெரியாது போடா’. மூன்று மொழிப்போரை திராவிட முன்னேற்ற கழகம் சந்தித்துள்ளது. இளைஞரணியும் மாணவரணியும் கடந்த நான்கு வருடங்களில் நடத்திய போராட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. முதல் கட்டமாக வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டம் மீண்டும் நீங்கள் இந்தியை திணித்தால் முதல்வரின் ஆணையைப் பெற்று டெல்லியிலும் போராட்டம் நடக்கும். இந்தியை எப்போதும் எதிர்ப்போம். மீண்டும் மொழிப்போர் ஏற்படுத்த வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.