அமைச்சர் கருப்பணனால் எல்லா இடங்களிலும் கெட்ட பெயர் தான்... என்ன செய்வது முதல்வர் எடப்பாடிக்கு சொந்தக்காரராக போய்விட்டாரே.. என அமைச்சர் செங்கோட்டையன் முன்பே வெளிப்படையாக பேசினார்கள் கோபிசெட்டிபாளையம் அ.தி.மு.க. நிர்வாகிகள்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ மாணவியருக்கு சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். விழாவில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மாணவ மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், மக்கள் நலனுக்காக இந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிபெற்ற பிரதிநிதிகளுக்கு கட்சிப் பாகுபாடின்றி நிதி வழங்கி உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்பட இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் கூடுதலாக காவிலிபாளையம் குளம் உள்ளிட்ட குளங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தாமதமாக செல்வதற்கு காரணம் அங்குள்ள மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையில் மழைபெய்து மரங்கள் முறிந்து விழுந்ததே காரணம். குறித்த நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் சேர 3 வயது குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது அவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்கு தான் நடத்தப்படுகிறது" என்றார்.
பிறகு செய்தியாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்சி பாகுபாடு இன்றி அரசு நிதி வழங்கும் என நீங்கள் கூறுகிறீர்கள். அமைச்சர் கருப்பணன் தி.மு.க.வெற்றி பெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறைவான நிதியை தான் வழங்குவோம் என கூறியிருக்கிறார். இதில் எது நடக்கும்? என கேள்வி எழுப்ப, வழக்கம் போல் சிரிக்க தொடங்கினார். அப்போது அங்கிருந்த அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர், அதுக்குதான் முதல்வரிடம் செமையா கருப்பணன் வாங்கி கட்டிக்கிட்டாரே... என எதார்த்தமாக கமென்ட் அடிக்க காரில் ஏறி புறப்பட்டார் செங்கோட்டையன்.