கடந்த ஆகஸ்டு மாதம் 20ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டன. தமிழ்நாட்டில் இருந்து ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொண்டன. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது; பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்பு; பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து செப் 20 அன்று (இன்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவானது. அதன்படி தமிழ்நாட்டில், கட்சி பிரமுகர்கள் தங்களின் வீட்டிற்கு வெளியே கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி இன்று காலை திமுக இளைஞர் அணிச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞர் அணி தலைமையகமான அன்பகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதேபோல், திமுக மகளிர் அணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, தனது சிஐடி காலனி இல்லத்தின் வெளியே கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதேபோல், கூட்டணி கட்சித் தலைவரான வைகோ, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்களும் தங்கள் இலத்தின் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள்: ஸ்டாலின், அஷோக்குமார், குமரேஷ்