தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. நேற்று முன்தினம் (23.09.2021) திருப்பத்தூரில் தனியார் நட்சத்திர ஹோட்டலில், திருப்பத்தூர் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''திமுக என்றாலே தேர்தலில் தில்லுமுல்லு செய்யும் கட்சி. ஐந்து சவரனுக்கு குறைவாக அடமானம் வைத்தவர்களின் நகைக்கடன், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கியிருந்தாலும் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது அதை விட்டுவிட்டார். இப்போது கூட்டுறவு சங்கத்தில் வைத்த கடனை மட்டும் ரத்து செய்வோம் என்கிறார். அதுக்கும் ஏராளமான கண்டிஷனைப் போட்டுள்ளார். இதனால் கடன் தள்ளுபடி செய்யப்படுமா செய்யப்படாதா என்ற ஐயப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்குப் பின்பு ஒரு பேச்சு. இதுதான் திமுகவின் நிலைப்பாடு'' என்றார்.
இந்நிலையில், 'சொன்னதைத்தான் செய்கிறோம்' என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார். அதில், “திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 222 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக ஆட்சி பொறுப்பேற்று 4 மாதமே ஆன நிலையில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் சொன்னது மட்டுமின்றி சொல்லாததையும் செய்துகொடுத்துள்ளது திமுக அரசு'' என தெரிவித்துள்ளார்.