டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, இபிஎஸ் மற்றும் அவருடன் சென்றவர்கள் சந்தித்தனர். அமித்ஷாவின் இல்லத்தில் வைத்து நிகழ்ந்த இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நடந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது என்றும் அண்ணாமலை - இபிஎஸ் கருத்து மோதல் குறித்தும் மேலும் பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அதிமுக வட்டாரம் கூறுகிறது. இந்த சந்திப்பின் மூலம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகியுள்ளது என்றும் அதிமுக - பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி அவரது ஆதரவாளர்களுடன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், ''எப்பொழுதுமே சம்பிரதாயபடி சந்திக்கின்ற சந்திப்பு தான். ஒரு ஐந்து மாதங்களுக்கு முன்பு சந்தித்து பேசிவிட்டு சென்றோம். அதன் அடிப்படையில் நேற்றைய தினம் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசி இருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. ஏற்கனவே 2019ல் இருந்து நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தோம். 2021 சட்டமன்ற தேர்தலிலும் அது தொடர்ந்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர்கள் 'தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் கருத்து மோதல் தொடர்பாக பஞ்சாயத்து நடந்ததா?' என்ற கேள்விக்கு, ''உங்களுடைய கேள்வி தவறானது எங்களுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எந்த தகராறும் கிடையாது. தகராறு இருந்தால் எப்படி ஈரோட்டில் வந்து பிரச்சாரம் பண்ணுவார். வேண்டுமென்றே திட்டமிட்டு செய்தியாளர்கள் குளறுபடி செய்வதற்காகவே கேள்வி கேட்டார்கள். அதனால் தான் தவிர்க்க வேண்டும் என்று சொன்னேன். பாஜக-அதிமுகவை பிரிக்க நினைக்கிறார்கள். எங்களுடைய கூட்டணியில் செயல்படுகின்ற கட்சிகள் சுதந்திரமாக செயல்படுகின்ற கட்சிகள்.
திமுக கூட்டணிகள் போல அடிமை கட்சியல்ல. எதைச் சொன்னாலும் ஏற்பது எங்கள் கூட்டணியில் இல்லை. எங்கள் கூட்டணியில் அந்தந்த கட்சிகள் கொள்கை அடிப்படையில் செயல்படுவார்கள். கூட்டணி என்று வரும் பொழுது ஒற்றுமையாக செயல்படுவோம். இதுதான் எங்களுடைய கொள்கை. ஆனால் திமுகவில் பத்தாண்டு காலம் ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள். என்ன தவறு செய்தாலும் தட்டிக் கேட்பது கிடையாது. இப்பொழுது தான் அத்தி பூத்தது மாதிரி 12 மணி நேர வேலை மசோதாவை எதிர்த்து தான் வெளி நடப்பு செய்திருக்கிறார்கள். சட்டமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி திமுக செய்த தவறுகளை ஒரு வார்த்தை கூட கூட்டணி கட்சிகள் எதிர்த்து பேசியது கிடையாது.
30,000 கோடியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள் என ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இரண்டாவது ஆடியோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதிலும் சில கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளது. இதை முழுமையாக விசாரிக்க வேண்டும். இன்றைக்கு கூட செய்திகளில் நிதி அமைச்சர் பி.டி.ஆர், இதில் வெட்டி ஒட்டி செய்திகள் வெளியிட்டு இருக்கிறார்கள் என சொல்லி இருக்கிறார். வெட்டியோ ஒட்டியோ நமக்கு தெரியாது ஆனால் இந்த ஆடியோ செய்தி வந்து மூன்று நாட்களாக நாங்கள் எதுவும் சொல்லவில்லை. இது உண்மையாக இருக்குமா இல்லையா என்றெல்லாம் கருத்து நிலவி வந்தது. ஆனால் இவர் பத்திரிகை வாயிலாக செய்தி வெளியிட்ட பிறகுதான் இதில் ஏதாவது பிரச்சனை இருக்கிறது என்கின்ற நிலைமை வந்துள்ளது.
ஒரு நிதியமைச்சர் ஆடியோ மூலமாக 30,000 கோடி பணத்தை வைத்துக்கொண்டு சபரீசன், உதயநிதி என்ன செய்வது என்று தெரியவில்லை கருத்தை சொல்லி இருக்கிறார். இது மிக மிக ஆபத்தானது. இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ஊழல் செய்திருக்கிறார்களா இல்லையா இதை எல்லாம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அரசு. சிஏஜி ரிப்போர்ட்டில் எங்கே ஊழல் என்று சொல்லி இருக்கிறார்கள். முறைகேடு நடக்கவில்லை அதில் என்னென்ன விதத்தில் நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த இந்த நிதி பயன்படுத்தப்படவில்லை அப்படித்தான் சொல்லி இருக்கிறார்கள்.
கொடநாடு சம்பவம் நிகழ்ந்தது அதிமுக ஆட்சியில். நான் முதலமைச்சராக இருந்தபோது அதை கண்டுபிடித்தது அதிமுக அரசு. அதில் கைது செய்தது அதிமுக அரசாங்கம்; சிறையில் அடைத்தது அதிமுக அரசாங்கம்; நீதிமன்றத்தில் அமைச்சர் படுத்தியது அதிமுக அரசாங்கம்; நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவது அதிமுக அரசாங்கம்; அப்பொழுது கரோனா காலம் ஒரு வருடம் நீதிமன்றத்திற்கு விடுமுறை. அதனால் நீதிமன்றம் செயல்படவில்லை. அதன் பிறகு சாட்சி எல்லாம் வெளி மாநிலத்திற்கு போய் விட்டார்கள். அவர்களை மீண்டும் கண்டுபிடித்து விசாரணை மேற்கொள்கின்ற போது கிட்டத்தட்ட முடிகின்ற தருவாய். ஆர்கியூமெண்ட் அடுத்தது தீர்ப்பு என்ற நிலையில் ஆட்சி மாற்றம் வந்தது. மீண்டும் இந்த வழக்கை எடுக்க வேண்டுமென சொன்னார்கள். இதை முதன் முதலில் ஆரம்பித்தது ஸ்டாலின். நாங்கள் வழக்கு போட்டு குற்றவாளிகளை கைது செய்கிறோம். திமுக ஜாமீன் எடுத்தது . மு.க.ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்த நபர்கள் தான் அவர்களை ஜாமீன் எடுத்தார்கள்'' என்றார்.