மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நேற்று முன் தினம் (20-11-24) ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, பா.ஜ.க மூத்த தலைவர் வினோத் தாவ்டே, மற்றும் நபசோபரா தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ராஜன் நாயக் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் போது ரூ.5 கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட வீடியோ ஒன்று சமுக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் ஹோட்டலில் வாக்காளர்களை கவருவதற்காக பா.ஜ.க மூத்த தலைவர் வினோத் தாவ்டே, ரூ.5 கோடி பணத்தை விநியோகித்ததாக மாநில கட்சியான பகுஜன் விகாஸ் அகாடி தலைவர் ஹிதேந்திர தாக்கூர் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்த வினோத் தாவ்டே, ‘கட்சித் தொண்டர்களுக்கு தேர்தல் நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்கள் மட்டுமே வழங்கப்பட்டது. அந்த ஹோட்டல் தாக்கூருக்கு சொந்தமானது. அவருடைய ஹோட்டலுக்குச் சென்று அங்கு பணம் விநியோக்கிக்க நான் முட்டாள் இல்லை’ என்று கூறினார். இந்த விவகாரம் சர்ச்சையானதை தொடர்ந்து, வினோத் தாவ்டே, பா.ஜ.க வேட்பாளர் நாயக் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், வினோத் தாவ்டே மீது தேர்தல் ஆணையமும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் வினோத் தாவ்டே, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் சுப்ரியா ஷிரினேட் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், ‘தன் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. தவறான நோக்கத்துடன் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வாக்குக்கு பணம் கொடுத்தாகக் கூறப்படும் விவகாரத்தில் என்னக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக மூன்று காங்கிரஸ் தலைவர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும். பொய்களைப் பரப்புவதுதான் காங்கிரஸின் ஒரே திட்டம்.
இந்த வழக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். என் பெயரையும் பாஜகவின் பெயரையும் கெடுக்க அவர்கள் முயற்சி செய்தாலும், உண்மை தெளிவாக உள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினரின் விசாரணையில் 5 கோடி ரூபாய் திரும்பப் பெறப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.