தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாகச் செய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, டைபாய்டு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல், சளி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாள்தோறும் சளி, காய்ச்சல் பாதிப்புடன் ஏராளமானோர் சிகிச்சை பெற வருகின்றனர்.
குறிப்பாக மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 20 நாட்களில் மட்டும் ஈரோடு மாநகராட்சி பகுதியில் நான்கு பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தற்போது சுகாதாரத் துறையினர் கண்காணிப்பில் உள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:- ஈரோடு மாநகராட்சியில் 11 நகர்ப்புற சுகாதார நிலையம், 17 நகர்ப்புற நல வாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழையால் மாநகராட்சி பகுதியில் நான்கு மண்டல பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் போதுமான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 20 நாட்களில் மட்டும் நான்கு பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் வசிக்கும் பகுதியில் மக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு உள்ளதா என கண்டறியும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது.
நோய் பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் கொசு மருந்து ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவு தான். டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பனி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. மக்கள் முடிந்த அளவு வீடுகளில் தண்ணீர் தேங்கி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழைக்காலம் என்பதால் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் இரும்பல், சளி இருந்தால் சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளாமல் அருகில் இருக்கும் மருத்துவர்களை கலந்து ஆலோசித்து மருத்துவர்கள் கூறும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.