சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று (21.11.2023) மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது, கூட்டணி குறித்து முடிவெடுத்தல், பூத் கமிட்டி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்புகளின் களப்பணி குறித்தும், கட்சியை பலப்படுத்துவதற்கான பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தேர்தல் எப்போது வரும் என்று தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு திமுக அரசு மேல் கடுமையான அதிருப்தி இருக்கிறது. அதிமுகவுக்கு ஆதரவான அலை தமிழகத்தில் வீசிக்கொண்டிருக்கிறது.
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அப்போதே தெளிவுப்படுத்தி கூறிவிட்டார். அதனால், மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் விரோத போக்கை கடைபிடித்தால் மக்களிடம் அது குறித்து எடுத்து சொல்வோம். அதில் இருந்து பின்வாங்க மாட்டோம். திமுக கூட்டணியில் பல்வேறு முரண்பாடுகள் இருக்கிறது. அதை பார்க்காமல் அதிமுக கூட்டணியை பற்றி பேசுகிறார்கள். அதனால், அதிமுக கூட்டணியில் யார்? யார்? உள்ளார்கள் என அனைவருக்கும் கட்டாயம் தெரிவிக்கப்படும்.
சபாநாயகர் அப்பாவுக்கு அமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறது போல. அதனால், அவரை அமைச்சர் ஆக்கிவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அதற்காக தான் அவர் சட்டசபையில் பேசிக்கொண்டே இருக்கிறார். சட்டசபையிலும், பொது மேடையிலும் ஜெயலலிதாவை விமர்சித்தார்கள். பல்கலைக்கழக வேந்தராக முதல் அமைச்சர் தான் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா சொன்ன போது சட்டமன்றத்தில் அதை எதிர்த்தார்கள். இப்போது ஆதரவு தருகிறார்கள். உங்கள் நடிப்பை அதிமுககாரர்கள் நன்கு அறிந்தவர்கள்” என்று பேசினார்.