அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் எழுந்து தற்போது ஓபிஎஸ் அணி, எடப்பாடி பழனிசாமி அணி எனப் பிரிந்து செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் ஓபிஎஸ். இந்நிலையில் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களையும் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் கோவையில், கோவை செல்வராஜ் இல்லத்தில் ஆதரவாளர்கள் முன்பு ஓபிஎஸ் பேசுகையில், ''கழகத்தினுடைய சட்ட விதிகளை தன்னுடைய சுயநலத்திற்காகத் திருத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு அதனால் பல பிரச்சனைகள் உருவாகிவிட்டது. இன்றைக்குக் கழகம் எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளின்படி தான் நடைபெற வேண்டும் என்று இந்த தர்ம யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். புதிதாக சில விதிகளை உள்ளே புகுத்தி இருக்கிறார்கள். எம்ஜிஆர் ஒரு சாதாரண தொண்டன் கூட கழகத்தினுடைய உச்ச பதவிக்கு வர முடியும் என்ற சட்ட விதியை வைத்திருந்தார். அதனால்தான் ஓபிஎஸ் முதலமைச்சராகவும், பழனிசாமி முதலமைச்சராகவும், ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் வரக்கூடிய சூழல் ஏற்பட்டது.
ஆனால் இன்றைய நிலையில் அதிமுகவின் தலைமை பொறுப்புக்குப் போட்டியிடுவதற்கு பத்து மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், பத்து மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும், மேலும் அவர் ஐந்தாண்டுக் காலம் தலைமைக் கழக நிர்வாகியாக இருக்க வேண்டும் என்று சொன்னால் மிட்டா, மிராசுதார், கோடீஸ்வரர்கள் தான் இந்தப் பதவிக்கு வர முடியும் என்ற நிலை உருவாகியது. இந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது. எம்ஜிஆர் நினைத்தபடி சாதாரண தொண்டன் கூட தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்று சட்ட விதிகளைத் தார்மீக உரிமையோடு, மனிதாபிமான அடிப்படையில், என்றைக்கும் இந்த இயக்கம் தொண்டர்கள் இயக்கமாகத்தான் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தர்மயுத்தத்தைக் கண்டுள்ளோம். ஜெயலலிதா வழிநடத்திய எண்ணங்களுக்கு மாற்றாக இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்காகத்தான் இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்'' என்றார்.