
தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால், தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில், தேர்தல் தேதி முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல், நேர்காணல் போன்ற விஷயங்களில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன.
சட்டமன்றத் தேர்தலில் 20 வருடங்களுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பாமக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று (09.03.2021) மதியம் 12 மணிக்கு பாமக அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. பாமக நிர்வாகிகள் குழுக்கூட்டம் பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் முன்னிலையில் காணொலி காட்சி மூலமாக நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகள் எந்தெந்த தொகுதிகள், யார் வேட்பாளர் என்பது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.