அதிமுகவில் உள்ள மோதல் போக்கால் திமுகவிற்குச் சாதகமான சூழல் ஏற்படாது என சசிகலா கூறியுள்ளார்.
நேற்று கூடிய தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத்தினை தடை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மசோதா மீதான விவாதத்தின் போது அனைத்துக் கட்சிகளில் இருந்தும் உறுப்பினர் ஒருவருக்கு இதுகுறித்து பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அதிமுக சார்பில் இபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பேசினார். இதன் பின் சபாநாயகர் அப்பாவு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு வாய்ப்பளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை வரவேற்பதாகப் பேசி இருந்தார். இதற்கு இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். இது இரு தரப்பிற்கும் இடையே மோதலாக ஆனது.
இந்நிலையில் திருவாரூரில் நேற்று நடந்த திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட சசிகலா நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், “சட்டப்பேரவையில் நாங்கள் ஒருவர் மட்டும் தான் அதிமுக என எடப்பாடி பழனிசாமி நேரடியாகவே கூறியுள்ளார். இந்த மோதல் போக்கை கடைப்பிடித்தால் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் திமுகவிற்குச் சாதகமான சூழல் ஏற்படுமா?” என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த சசிகலா, “நிச்சயம் ஏற்படாது. ஏற்படும் அளவிற்கு நான் விடமாட்டேன். நிச்சயமாக எல்லோரும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்போம்.
இடைத்தேர்தலில் அதிமுக சந்தித்த மிகப்பெரிய தோல்விக்கு பிரிந்து இருப்பது தான் காரணம். அனைவரையும் சேர்ப்பதற்கு முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறேன். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் நிச்சயமாக நாங்கள் சேர்ந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம். எங்கள் கட்சிக்காரர்களிடம் நான் வித்தியாசம் பார்ப்பது இல்லை” எனக் கூறினார்.