தான் பெற்றோருடன் சேர்ந்ததற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட திமுக எம்.பி. சுமதி (என்ற) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு கேரள சிறுமி எல்லீஸ், நன்றியை, வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் சிலபகுதிகளில், கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மத்திய அரசு தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவை, கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் அமல்படுத்தியது. இதன் காரணமாக நாடு முழுவதும் பொது போக்குவரத்துகளான பஸ், ரயில், விமான சேவைகள், மக்களின் அத்தியாவசியச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். வெளிமாநிலங்களுக்கு பணிநிமித்தமாக சென்றவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஊர் திரும்ப முடியாமல் கடுமையாகச் சிக்கிக்கொண்டனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் அக்கமாலி பகுதியைச் சேர்ந்த சிறுமி எல்லீஸ், பள்ளி விடுமுறையின் காரணமாக, சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படவே, பெற்றோரைக் காணாது அவர் தவித்து வந்தார். சிறுமியின் பெற்றோர் கேரளாவில் தவித்து வந்த நிலையில், அவர்கள் சாலக்குடி பகுதி எம்.பி. பென்னி பகனனை தொடர்பு கொண்டார். அவர்களுக்கு உதவ உறுதியளித்த எம்,பி பென்னி, உடனடியாக, தெற்கு சென்னை திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனை தொடர்பு கொண்டு உதவி கேட்டார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை திமுக சார்பில் தொண்டர்கள் வழங்கிவரும் நிலையில், சென்னை அண்ணாநகரில் பகுதியில் தவித்து வரும் கேரள சிறுமியின் விபரங்களைத் திரட்டி, தமிழச்சியிடம் அளித்தனர். எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு சிறுமி எல்லீசை, அவரது பெற்றோருடன் சேர்வதற்கான வழிவகைகளை மேற்கொண்டனர். இதன் பலனாக, சிறுமி எல்லீஸ், தனது பெற்றோருடன் இணைந்தார்.
தான் பெற்றோருடன் சேர்ந்ததற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட திமுக எம்.பி. சுமதி (என்ற) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு சிறுமி எல்லீஸ், நன்றியை, வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை, தமிழச்சி, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எம்.பி. தமிழச்சியின் இந்த உதவிக்கு திமுக தொண்டர்கள் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.