இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,76,583- லிருந்து 2,86,579 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,745- லிருந்து 8,102 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,35,206- லிருந்து 1,41,029 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்த 1,37,448 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே போல் தமிழகத்தில் 36,841 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறவில்லை எனவும், கரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை, மறைக்கவும் முடியாது புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே கரோனா உயிரிழப்புகள் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன என்று முதல்வர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு முடக்கம் அமலுக்கு வரப் போவதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் 'சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு முடக்கம் அறிவிக்கப்படுவதாக வெளியான தகவல்கள் வதந்தி என்று கூறியிருந்தார். அதே போல் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது சென்னையில் கரோனா தொற்று சமூகப் பரவலா இல்லையா என மத்திய அரசு தான் கூற வேண்டும் என்று கூறினார். இதனால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு வர வாய்ப்பு இருக்குமா, இல்லையா என்று மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.