கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் மகரவிளக்கு, மண்டலக்கால பூஜை சீசன் தொடங்கியுள்ளது. ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்குச் சென்று வருகின்றனர். கடந்த ஆண்டைவிடப் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சத்திரம், புல்மேடு வழியாகச் சபரிமலைக்கு வருவதற்கு ஏராளமான பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொதுவாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் பம்மை வழிப்பாதை மற்றும் பெருவழிப் பாதையை தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், இவை இரண்டையும் விட புல்மேடு பாதை வழியாகச் சென்றால் நேரடியாக சபரிமலை சன்னிதானத்திற்கே எளிதில் செல்லலாம். இது பம்பை, பெருவழியை விட மிக எளிமையான பாதையாகும். தற்போது புல்மேடு வழியாகச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு புல் மேடு வழியாக சன்னிதானத்திற்கு சென்று கொண்டிருந்த நபர் அவரால் முடியாமல் இருப்பதாக கீழே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கேரளா காவல்துறையினர் மற்றும் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் துணை கமாண்டண்ட் சுதாகர தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்குத் தகவல் சென்றது.
அதன் பேரில் விரைந்து வந்த கேரளா காவல்துறையினர் மற்றும் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படைவீரர்கள் அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வருண் குமார் என்றும், 20 வயதான அந்த இளைஞருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாக புல்மேடு பகுதியில் நின்று விட்டதாக தெரியவந்தது.
இதனை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் கேரளா போலீசார் உதவியுடன் சுமார் 4 கிலோ மீட்டர் சன்னிதானம் வரை தூக்கிச் சென்று அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.