தான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை அண்ணாமலை பதிலளிக்கவில்லை என்று தமிழக மின்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ''இந்தியா முழுக்க இருக்கக்கூடிய மாநிலங்களில் ஒரே நிலைப்பாடுகள் தான் இருக்கிறது. ஒழுங்குமுறை ஆணையங்கள் இருக்கிறது. அது ஒரு தனிப்பட்ட, அரசு நிர்வாகத்தை விடுத்து தனிப்பட்ட முழு அதிகாரம் கொண்ட அமைப்பு. ஒழுங்குமுறை ஆணையத்தின் முழு அதிகாரத்தை பறிப்பதற்கான செயல்களில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. அதற்காகத்தான் மின்சார திருத்த சட்ட மசோதா கூட நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. முதல்வரின் வழிகாட்டுதல்படி நாடாளுமன்ற குழுத் தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
பொதுவாக மாநில கட்சிகள் அந்தந்த மாநிலங்களின் கொள்கைகளைக் கொண்டு ஆட்சி நடத்தும். ஒன்றிய அரசில் இருக்கக்கூடிய தேசிய கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். கர்நாடகாவில் என்ன மின் கட்டணம் இருக்கிறது, இங்கு என்ன மின் கட்டணம் இருக்கிறது, அவர்கள் ஆளக்கூடிய குஜராத்தில் மின் கட்டணம் எப்படி இருக்கிறது, உத்திர பிரதேசத்தில் மின் கட்டணம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு சீர்தூக்கி, அது சம்பந்தமான கருத்துக்களை சொல்ல வேண்டும். ஆனால் இங்கு வேலை வெட்டி இல்லாத நபர் ஒருவர் உங்களை சந்திப்பது, லைவில் வரவேண்டும், நீங்கள் தலைப்புச் செய்தியாக போட வேண்டும், அவர் பேசியது தொடர்பாக எங்களைப் போன்றவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும், அதனைச் செய்தியாக நீங்கள் போட வேண்டும்.
நான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை அந்த நபர் பதில் சொல்லவில்லை. நிலக்கரி இறக்குமதியை எவ்வளவு தமிழக அரசு செய்தது, ஒன்றிய அரசு எவ்வளவு நிர்ணயம் செய்துள்ளது என்று கேட்டிருந்தேன். இதுவரை அதற்கு பதில் சொல்லவில்லை. அடுத்த முறை அவர் செய்தியாளர்களை சந்திக்கும்போது இதற்கெல்லாம் பதில் வாங்கி வந்து விடுங்கள். அப்படி இருந்தால் அடுத்தமுறை அவர் தொடர்பாக கேள்வி கேட்கலாம். இல்லையென்றால் அவரை மறந்து விடலாம்.
ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்ள வேண்டிய பக்குவம் இருக்க வேண்டும். தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது தெரிந்து கொள்வதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். இந்த இரண்டுமே இல்லாத நபரை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்'' என்று பாஜக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்தார்.