நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையில் ஆட்சியை பிடித்தது. தமிழகத்தில் திமுக கூட்டணி தேனி தொகுதியை தவிர போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி, அதிமுக வேட்பாளர்கள், இன்று எம்.பி பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டனர். அப்போது திமுக வேட்பாளர்கள் அனைவரும் கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க, தமிழ்நாடு வாழ்க, பெரியார் வாழ்க என்றும் தமிழ்நாடு வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று கூறினார்கள்.
காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் பெருந்தலைவர் காமராஜ் வாழ்க, ராஜிவ் காந்தி வாழ்க என்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அனைவரும் உலக தொழிலாளர்கள் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் வாழ்க பெரியார், வாழ்க அம்பேத்கர் என்று பதவி ஏற்றனர். தமிழகத்தில் இருந்து சென்ற அனைத்து எம்.பி.க்களும் தமிழ் மொழியில் பதவி ஏற்றுக் கொண்டனர். ஒரு கட்டத்தில் ’தமிழ் வாழ்க’ என்று உறுப்பினர்கள் சொல்லும்போது பாஜக எம்.பி.க்கள் ’பாரத் மாதாகி ஜே’ என்று கூச்சலிட்டனர். இதனால் பதவி ஏற்ற முதல் நாளிலேயே பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பாஜகவிற்கு தமிழக எம்.பி.க்கள் சவாலாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதிமுகவின் ஒற்றை எம்.பியாக மக்களவை சென்றுள்ள ஓ.பி.ரவீந்திரனாத் மட்டும் “வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்” என்று கூறி பதவியேற்றார்.