முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் எப்பொழுதும் மிக மரியாதையாக பார்க்கக் கூடிய தலைவர் எம்.ஜி.ஆர். கட்சி எல்லைகளைக் கடந்து அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. காமராஜர் கொண்டு வந்த சத்து உருண்டை திட்டத்தை விரிவுபடுத்தியவர் அவர். மிகச்சிறந்த ஆட்சியாளராக இருந்தவர். எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தவர். அந்த நன்றியுணர்வுடன் எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.
அதிமுக சிதறியுள்ளதைக் குறித்து ஆளுநராக என் கருத்தைக் கேட்கிறார்கள். கட்சித்தலைவராக இருந்தால்தான் அதற்குப் பதில் சொல்லமுடியும். ஆளுநராக அதற்குப் பதில் சொல்லமுடியாது. எம்.ஜி.ஆர் நல்ல கனவுடன் ஒரு கட்சியை நடத்தி வந்தார்கள். அவர்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்றுவது சிறப்பாக இருக்கும். இது ஆளுநராக இல்லாமல் தனிப்பட்ட எனது கருத்து. எம்.ஜி.ஆர் தேசியம் போற்றிய திராவிடத் தலைவர்” எனக் கூறினார்.