
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் சித்தையன்கோட்டை பேரூர், அழகர் நாயக்கன்பட்டி மற்றும் புதுப்பட்டி ஏ.டி காலனி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் ரூ.1.20 கோடி மதிப்புள்ள கிராம அறிவு மையக் கட்டடம்(சமுதாயக்கூடம்) கட்டும் புதிய திட்டப்பணிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு சேடப்பட்டியில் திருமண மண்டபம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் இப்பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. மேலும், இத்திருமண மண்டபத்தில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளது.
பொதுமக்களுக்கு தேவையான நியாயவிலைக்கடை, சத்துணவு மையம், நாடக மேடை, திருமண மண்டபம், பொதுமக்கள் பயன் பாட்டிற்கு குடிநீர் வழங்குவதற்கு ஏதுவாக இரண்டு குடிநீர் தொட்டிகள் ஆகிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி சித்தையன்கோட்டை பேரூர், அழகர் நாயக்கன்பட்டி மற்றும் புதுப்பட்டி, ஏ.டி. காலனி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டிலான கிராம அறிவு மையக் கட்டடம் (சமுதாயக்கூ டம்) கட்டும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

பொதுமக்கள் திருமணம் நடத்துவதற்கு திருமண மண்டபம் கட்டுவதற்கு மனப்பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும். மக்களின் வசதிக்காகத்தான் இத்திருமண மண்டபம் உருவாக்கப்படுகிறது. இத்திருமண மண்டபத்தில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவது நமது கடமையாகும். இந்த கடமையை நிறைவேற்றுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். முதலமைச்சரின் அரசு எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை முதலமைச்சர் நிருபித்துக் காட்டியுள்ளார். சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார்.
சாதி கிடையாது, மதம் கிடையாது நாம் அனைவரும் அண்ணன் தம்பிகள், மாமன் மைத்துனர்கள்; எல்லோரும் உறவினர்கள் என்ற மனப்பான்மையுடன் இன்றைக்கு தமிழகம் உருவாக்கப்பட்டு வருகிறது. நடுப்பட்டி ஊராட்சி காலனியில் ரூ.1.75 கோடியில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் இந்த திருமண மண்டபம் பயன் உள்ளதாக இருக்கிறது. இது போன்ற அரசின் திட்டங்களுக்கு பொதுமக்கள் நல் ஆதரவு தர வேண்டும். அரசின் திட்டங்களை பொது மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.