தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதில் ஒரு பகுதியாகக் காணொளி காட்சி மூலம், தி.மு.க தலைவர் ஸ்டாலின், தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாவட்டம் வாரியாக, தி.மு.க நிர்வாகிகளுடன் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் ‘தமிழகம் மீட்போம்’ தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மற்றும் பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதம சிகாமணி பேசியபோது, “தி.மு.க தலைவரின் தமிழகம் மீட்போம் என்ற இந்தத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம், எட்டு வழிச்சாலை கொண்டுவந்து விவசாயிகளின் வயிற்றில் அடித்த எடப்பாடியின் ஆட்சியை வீழ்த்திட, மாணவர்களின் கல்விக் கனவுகளைச் சிதைத்த எடப்பாடியின் ஆட்சியை வீழ்த்திட, கரோனா கொடிய நோய் மூலம் கோடி கோடியாகக் கொள்ளையடித்த எடப்பாடியின் ஆட்சியை வீழ்த்திட, மிக எழுச்சியாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் எடப்பாடியின் கொடுங்கோல் ஆட்சியை, விரைவில் தூக்கி எறியும் நாள் வெகு தொலைவில் இல்லை. முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்திலேயே, கடந்த பாராளுமன்றத் தேர்தலில், நாம் வரலாறு காணாத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ள, மூன்று சட்டமன்றத் தொகுதிகளில், சுமார் 2,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்பது அழியா வரலாறு.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பிரச்சாரம் செய்த நமது தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இந்தத் தேர்தலிலும் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பிரச்சாரத்தை தொடங்கிய முதல் நாளே, இந்த அ.தி.மு.க அரசு தோல்வி பயத்தில் தடுத்து நிறுத்தி, பல தடைகளைப் போட்டுள்ளது. இந்தத் தடைகளை தாண்டி, நாம் வரும் தேர்தலில் வரலாறு காணாத 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று கழகத் தலைவரை, முதலவராக்குவது உறுதி என்பதைத்தான், மிகச் சிறப்பாக நடந்து வரும், இந்தத் தமிழகம் மீட்போம் பொதுக்கூட்டங்கள் உணர்த்தி வருகின்றன.
ஆங்கிலத்தில் ஒரு சிறந்த வரிகள் உண்டு, ஆங்கில அறிஞர் ஜேம்ஸ் ஃப்ரீ மேன் கிலார்க் கூறிய "A politician thinks about the next election, a statesman (leader) thinks of next generation" இந்த வரிகளுக்கு ஏற்ப எடப்பாடி பழனிசாமி சராசரி அரசியல்வாதியாக, தான் கொள்ளை அடித்து வைத்துள்ள பணத்தை வைத்துக்கொண்டு வரும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என கனவு காண்கிறார்.
ஆனால், நமது தி.மு.க தலைவர் அடுத்த தலைமுறையான இளைஞர்களைப் பற்றியும், மாணவர்களைப் பற்றியும் தொடர்ந்து சிந்திப்பதால்தான், மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடியது மட்டுமல்லாமல், 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்து, அவர்களின் படிப்புச் செலவையும், திராவிட முன்னேற்றக் கழகமே ஏற்கும் என்று அறிக்கை விடுத்து, தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றியுள்ளார். விரைவில் தி.மு.க ஆட்சி மலரும், நமது தலைவர் முதல்வராவார்” என உரையாற்றினார்.