புரட்சியாளர் சேகுவேரா மகள் அலைடா குவேரா மற்றும் அவரது மகள் பேரா. எஸ்டெஃபானி குவேரா ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். இவர்களுக்கு நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியானது சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி, மதிமுக சார்பில் வந்தியத்தேவன், காங்கிரஸ் கட்சி சார்பில் கோபண்ணா, விசிக சார்பில் தொல்.திருமாவளவன் எம்.பி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, “ ‘புரட்சி என்பது பழத்தைப் போன்றது அல்ல. அது தானாகப் பழுத்து விழும் என்று நாம் காத்திருக்க முடியாது’ என சே ஒருமுறை குறிப்பிட்டார். அதுபோலத்தான், இதற்கு முன் ஆசிரியர் பேசும்போது தமிழ்நாடு தமிழ்நாடு எனக் குறிப்பிட்டார். அதற்குப் பின்னால் ஒரு கதை உள்ளது. இப்பொழுது அந்த கதை இல்லாமல் போய்விட்டது. அந்தக் கிணற்றையே காணவில்லை எனச் சொல்லிவிட்டார்கள்” எனக் கூறினார்.
ஆளுநரின் தமிழ்நாடு கருத்து குறித்து பேசிய கனிமொழி, “நான் ஏன் அப்படிப் பேசப்போகிறேன். நான் சொன்னது உங்களுக்குப் புரியவில்லை எனச் சொல்லிவிட்டார். அது தவறு இல்லை. அவர்கள் பேசும் மொழி, வேறு மொழி. அதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை. அது நமக்கு புரியாமல் தான் இருக்கிறது. அதனால் இன்று நான் சொல்லாத ஒன்றைச் சொல்லிவிட்டீர்கள் என்று சொல்லியுள்ளார். இங்கு உருவாகிய புரட்சிக்கனல் அவர்களை அவ்வாறு சொல்ல வைத்துள்ளது.
சாதாரணமாக மக்களை உரசிப்பார்த்தால் தமிழர்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள். அவர்கள் உள்ளே எரியக்கூடிய அந்த தீக்கங்கு இன்னும் அணையவில்லை என்பதைப் புரிந்து கொள்ளும்போது யாராக இருந்தாலும் நான் அப்படிச் சொல்லவே இல்லை என்று சொல்லும் நிலை வரும். அதை நாம் இன்று உருவாக்கிக் காட்டியுள்ளோம்” எனக் கூறினார்.