சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த 3வது நீதிபதி சத்யநாராயணன், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்,
இந்த வழக்கில் பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதைத்தான் பார்க்க வேண்டும். பேரவைத் தலைவர் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி நீக்கியது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இப்படி தீர்ப்பு வழக்கிவிட்டதாலேயே அரசு செய்வது அனைத்தும் சரி என்று பொருளும் அல்ல, அர்த்தமும் கிடையாது. இன்று உள்ள அரசாங்கத்தை பொருத்தமட்டில் சொந்த கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவை இழந்து நிற்கிறது. பொதுமக்களின் ஆதரவை இழந்து நிற்கிறது. யாருடைய ஆதரவும் இல்லாமல் அந்தரத்தில் நிற்பது போன்றுதான் இந்த ஆட்சி நிற்கிறது.
ஏற்கனவே இரண்டு தொகுதி காலியாக உள்ள நிலையில், தற்போது 18 தொகுதிகள் என சேர்த்து 20 தொகுதிகளில் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இன்றைக்கு இருக்கிற அதிமுக அரசு பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துவிட்டதாலும், சொந்தக் கட்சி எம்எல்ஏக்களை இழந்துவிட்டதாலும் பதவி விலகி தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.