கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ள நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
மாலை 4 மணி காங்கிரஸ் 136 இடங்களிலும், பாஜக 64 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. இதில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக 96 இடங்களிலும், பாஜக 45 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
கர்நாடகா மாநிலம், சிக்கமகளூரு தொகுதியில் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரான சி.டி.ரவி போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தம்மையா என்பவர் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் சி.டி.ரவி 77,979 வாக்குகளை பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தம்மையா 84,015 வாக்குகளை பெற்றுள்ளார். இதன்படி தம்மையா சுமார் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல், கர்நாடகாவில் இதுவரை வெளியான முடிவுகளின்படி பாஜக அமைச்சர்கள் 15 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.