கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.முக. நிர்வாகி வைரமுத்து தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், "ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அந்தப் பதவிகளுக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் இருவரும் நேரடியாக ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இப்படி பல வாதங்கள் இருவர் தரப்பிலும் முன்வைக்கப்பட்ட நிலையில், இதைப் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், அதிமுக பொதுக்குழு விவகாரத்தை இந்த வாரமே விசாரித்து முடிக்க விரும்புகிறோம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.