ஈழத்தமிழர்களை விடுதலை செய்வதோடு, திருச்சி சிறப்பு முகாமையும் இழுத்து மூடவேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்கிரம, அராஜகங்கள் தொடங்கியது 1947க்குப் பிறகுதான். நாகரிக, அறிவியல் உயர்தனிப் பண்பாடுடைய தமிழ்நாடும் ஆகப் பிற்போக்கான மனுதர்ம வர்ணாசிரம இந்தி மாநிலங்களும் சேர்ந்து இந்தியா என்ற பெயரில் ஆன பிறகுதான்.
உண்மை சுடும் என்றபடி தமிழ், இந்தி பேசுவோரைச் சுடுகிறது. ஆட்சியதிகாரம் எப்போதுமே அவர்கள் கையில் என்பதால், இப்போது ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி ஆட்சி ஏற்பட்டபின் தமிழை இல்லாமல் செய்துவிடுவது என்றே முடிவுகட்டிவிட்டனர்.
அதன் விளைவுதான் தமிழ், தமிழர், தமிழ்நாடு மீதான அடக்குமுறை, அதிகாரப் பறிப்பு, உரிமைப் பறிப்பு, வாழ்வாதாரப் பறிப்பு!
2009இல் ஈழ இனப்படுகொலை; 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் உலகெங்கும் சிதறி ஓடினர். தமிழ்நாட்டிற்கும் வந்தனர். அவர்களுக்கு அகதி என்ற அங்கீகாரம் கூட இல்லை. ஆனால் தலாய்லாமா தலைமையில் வந்த திபெத்தியர்கள், இந்தியாவின் அரசு உயரதிகாரி அளவுக்கு அகதி வருவாய் ஈட்டுகின்றனர். ஈழத்தமிழர்களை கைது செய்து, சிறைப்படுத்தி சித்திரவதையே செய்கின்றனர். அதற்கு உதாரணம்தான் தற்போது திருச்சி சிறப்பு முகாம் (?) இல் நடப்பது.
காரணமே இன்றி திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள், தங்களை விடுவிக்கக்கோரி சாகும்வரை பட்டினிப் போர் தொடங்கியுள்ளனர். ஆனால் இதைக் கண்டுகொள்வாரில்லை.
விசா இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்றதாகவும் சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் தங்கியிருந்ததாகவும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்களைத்தான், கியூ பிரிவு போலீசார் சட்டவிரோதமாக மீண்டும் கைது செய்து இந்த சிறப்பு முகாமில் அடைத்துள்ளனர்.
அடைத்துவைத்து நீண்ட நாட்களாகியும் இதுவரை குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யவில்லை. இப்படி காலவரையறையின்றி அடைத்து வைக்க சட்டத்தில் இடமேது? 133 கோடி மக்களையும் மடையர்களாக்குவதல்லவா இது? இதனால் பல போராட்டங்களை நடத்தினர். அசைவு கூட ஏற்படாத நிலையில்தான் இப்போது சாகும் வரை பட்டினிப் போர்!
இதற்கு முன் நான் இதற்காக திருச்சியில் மாபெரும் போராட்டத்தை நடத்தி கைதாகினேன். மேலும் பல உயர் அதிகாரிகளிடம் முறையிட்டேன். ஆனால் இதில் அரசுதான் கொள்கை முடிவு எடுக்கவேண்டும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
ஆனால் கியூ பிரிவு போலீசோ, பட்டினிப் போரில் இருக்கும் ஈழத்தமிழர்களை அடித்து உதைத்து சித்தரவதையே செய்கிறது. தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப் போடுவோம் என்றும் உணவுப்பொருள் உள்ளிட்ட அனைத்தையும் நிறுத்திவிடுவோம் என்றும் மிரட்டுகிறது.
இதனால் அவர்களின் குடும்பம் மிகுந்த மன உளைச்சலாவதுடன் கடும் பொருளியல் நெருக்கடியையும் சந்திக்க நேர்கிறது. இதனால் தாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வோம் எனக் கதறும் காணொளி வெளியாகி நெஞ்சைப் பிளக்கிறது.
அடிக்கொரு தரம் இது அம்மா ஆட்சி என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எந்த அம்மா? ஈழ இனப்படுகொலைக்கு தனித் தமிழ் ஈழமே தீர்வு என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அம்மா! அந்த அம்மாவின் ஆட்சி நடத்தும் எட்ப்பாடி பழனிசாமியோ இதையெல்லாம் கண்டும் காணாமலிருக்கிறார்.
முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, ஈழத்தமிழர்களை விடுதலை செய்வதோடு, திருச்சி சிறப்பு முகாமையும் இழுத்து மூடவேண்டுமென வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார்.