தமிழக அரசு அனுப்பிய, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு சட்டவரைவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பல்வேறு தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துவந்தன. அதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு சட்ட வரைவுக்கு அனுமதி அளிக்கும்படி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோப்புகளை அனுப்பினார். இந்நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் 7.5% உள் இட ஒதுக்கீடு சட்ட வரைவுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநருக்குக் கடிதம் அனுப்பினார். அதற்குப் பதில் அளித்த ஆளுநர், ஒப்புதல் வழங்குவது குறித்து முடிவெடுக்க, தனக்கு 3 முதல் 4 வாரங்கள் கால அவகாசம் தேவை எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தி.மு.க சார்பில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆளுநரையும் தமிழக முதல்வரையும் கண்டித்து சின்னமலை ராஜீவ் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தி.மு.க பொருளாளர், டி.ஆர்.பாலு, எம்.பி. கனிமொழி, எம்.எல்.ஏகள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியம், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் என 4,000-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் இதில் கலந்துகொண்டனர்.
"அழிக்காதே! அழிக்காதே! அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை அழிக்காதே!" எனும் வாசகத்துடன் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாகப் போராட்டம் தொடங்குமுன், மா.சுப்பிரமணியம் “நமக்கு ஒரு கி.மீ வரை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், அனைவரும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.” என்று அறிவித்திருந்தார்.