2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 இடங்களில் 303 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது பாஜக. இது 2014 தேர்தலை விட 21 இடங்கள் அதிகமாகும். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்கள் மட்டுமே கிடைத்தது.
இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கேரள கல்வித் திருவிழா நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஹரியானா, குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. பல்வேறு மாநிலங்களில் பாஜக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது.
2024 மக்களவைத் தேர்தலில் இந்த அளவுக்கு பாஜக வெற்றி பெறுவது சாத்தியமில்லை. 2019 ஆம் ஆண்டு பாஜக வென்றிருப்பதை விட 50 இடங்கள் வரை குறைவாகப் பெற்று எதிர்க்கட்சிகள் 290 தொகுதிகள் வரை பெற்றால் நிலைமை என்னவாகும்.
கடந்த மக்களவைத் தேர்தலில் புல்வாமா தாக்குதல், பாலாகோட் தாக்குதல் ஆகியவை பாஜகவுக்கு தேர்தல் நேரத்தில் கை கொடுத்தது. அது பாஜக ஆதரவு அலையாக மாறியது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் பாஜக ஆதிக்கம் தொடரும் என்பதை மறுப்பதற்கு இல்லை” எனக் கூறினார்.