Skip to main content

பாஜக மூத்த தலைவர்கள் மீது சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை அடுக்கும் சூர்யா சிவா

Published on 06/12/2022 | Edited on 25/12/2022

 

Surya siva's resign letter from bjp

 

தமிழ்நாடு பாஜக ஓ.பி.சி. அணியின் முன்னாள் பொதுச் செயலாளர் சூர்யா சிவா, தமிழ்நாடு பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இருவரையும் விசாரிக்க பாஜக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு உத்தரவிட்டார். அதற்கு ஆஜரான இருவரும் விளக்கம் கொடுத்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்கள் சந்திப்பில், ‘நாங்கள் இருவரும் அக்கா தம்பி போன்றோர்’ என முடித்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து சூர்யா சிவா பா.ஜ.க.விலிருந்து 6 மாதத்திற்கு அண்ணாமலையால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

 

இந்நிலையில், பாஜக மூத்த நிர்வாகியான கேசவ விநாயகம் மீது குற்றச்சாட்டு வைத்து கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக சூர்யா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்தக் கட்சியில் பயணித்தது எனக்குக் கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும். அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.  

 

இந்நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பியுள்ளார். அதில் அவர், “தமிழக பாஜகவுக்கு நீங்கள் ஒரு பொன்னான பரிசு.  2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக நிச்சயமாக நீங்கள் இருப்பீர்கள். கடந்த சில மாதங்களாக உங்கள் தலைமையின் கீழ் இருப்பது ஆசீர்வதிக்கப்பட்டு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவின் அடுத்த திட்டமிடப்பட்ட பிரதமராகக் கூட நீங்கள் ஒரு திறமையான வேட்பாளர். இந்திய அரசியலில் உங்களின் வளர்ச்சியைக் கண்டு ரசிக்கிறேன்.

 

 

எல்.முருகன் மற்றும் கேசவ விநாயகம் ஆகிய இருவரும் சந்தோஷமாய் இருங்கள். இனியாவது கட்சிக்காரர்களை நம்புங்கள். உங்கள் தலையீடு இல்லாமல் என் தலைவரால் அற்புதமான காரியங்களைச் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். தயவு செய்து எமது மக்கள் தலைவருக்கு இடம் கொடுங்கள். காயத்ரி மற்றும் டெய்சி ஆகியோருடன் உங்கள் விளையாட்டுகளை விளையாடாதீர்கள். தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வேண்டுமெனில் நீங்கள் இருவரும் எனது தலைவர் வழியில் குறுக்கிட வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்