அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. சிறு வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவை சுமந்த அனிதா கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த +2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். நீட் தேர்வில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். இதனால் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி குழுமூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
''நீட் தேர்வு எதிர்ப்பு போராளி அனிதாவின் மூன்றாமாண்டு நினைவு நாள்'' என்ற தலைப்பில் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
அனிதா என்ற பெயரை கேட்டவுடன், நீட் தேர்வு எதிர்ப்பு குறித்தே தமிழர்கள் மனதில் அலையடிக்கும். நீட் தேர்வுக்கு எதிராக தன்னுயிரை ஈந்து, நீட் தேர்வுக்கு எதிரான அடையாளமாகிப் போனார் அனிதா.
நீட் தேர்வு வந்த போது, அன்றைய முதல்வர் கலைஞர் அதனை தமிழகத்தில் அமல்படுத்த விடாமல் தடுத்து விட்டார். இந்தியாவிலேயே நீட்டை எதிர்த்த ஒரே முதல்வர் கலைஞர். அது தான் அவரது பகுத்தாயும் பார்வை, தொலைநோக்குப் பார்வை, சமூகநீதிப் பார்வை.
இத்தனைக்கும் நீட் தேர்வைக் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் தி.மு.க இருந்தது, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிலும் தி.மு.க இருந்தது. ஆனாலும் கூட்டணி கட்சியான காங்கிரஸின் நடவடிக்கையை எதிர்த்தார். அவர் தான் கலைஞர், அவர் தான் முதல்வர்.
இன்றைக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க கூட்டணிக் கட்சியாக இருந்து கொண்டும் அ.தி.மு.க ஆட்சி தடுமாறுகிறது, நீட் தேர்வை எதிர்க்க முடியாமல். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடிருந்த வரை நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விடவில்லை. அவர் பெயரில் ஆட்சி நடத்துவதாக சொல்லிக் கொள்ளும் எடப்பாடி, ஓ.பி.எஸ் கூட்டணி நீட் தேர்விற்கு சிகப்பு கம்பளம் விரித்து விட்டனர்.
நீட் தேர்வு வந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டது. கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் நுழைவது முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டது. இதனை கடந்த மூன்று ஆண்டுகளாக கண்கூடாக கண்டு வருகிறோம்.
நீட் தேர்விற்கு எதிராக தி.மு.க குரல் கொடுத்த போது பலரும் நீட் தேர்வின் அபாயத்தை உணரவில்லை. திராவிடர் கழகம் நீட் தேர்விற்கு எதிராக அனைத்துக் கட்சிகளை இணைத்து போராட்டம் நடத்தியது. அரியலூரில் அந்தப் போராட்டம் எனது தலைமையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட போது தான் அனிதாவை சந்தித்தேன்.
+2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றவர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. ஏழை குடும்பத்தை சேர்ந்த அனிதாவின் தந்தையால் லட்சங்களை செலவழித்து நீட் தேர்வு பயிற்சிக்கு அனிதாவை அனுப்ப முடியாததால் இந்த நிலை. நீட் தேர்வு இல்லா விட்டால், அனிதாவின் மதிப்பெண்ணிற்கு எம்.பி.பி.எஸ் சேர இடம் கிடைத்திருக்கும். இப்போது மருத்துவம் படித்துக் கொண்டிருந்திருப்பார்.
அனிதா நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட பிறகு தான், நீட்டின் கோர முகத்தை எல்லோராலும் புரிந்து கொள்ள முடிந்தது. +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் பலர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. அனிதா போன்று பாதிக்கப்பட்டவர்கள் திரண்டனர். போராட்டம் வலுப்பெற்றது.
அனிதா மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைத்துக் கட்சி தலைவர்களை சந்தித்து, தங்கள் அவல நிலையை எடுத்துரைத்தனர். நீட் தேர்விற்கு எதிரான உணர்வு வலுப் பெற்றது. அரசு தரப்பையும் சந்தித்தனர் மாணவர்கள்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கப்படும் என மத்திய, மாநில அமைச்சர்கள் உறுதி அளித்தனர். "உச்ச நீதிமன்றத்தை நாடுங்கள், நியாயம் கிடைக்கும்", என ஒரு அமைச்சரே அறிவுரை கூறினார். மாணவர் அமைப்பு அதற்கான நடவடிக்கையை எடுத்தது.
நம்பிக்கையோடு டெல்லி உச்சநீதிமன்றம் சென்றார் அனிதா. ஆனால் அங்கு பெரும் கொடூரம் காத்திருந்தது. அனிதா மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் தரப்பை காது கொடுத்துக் கூட கேட்கவில்லை. நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையை துவங்க ஆணையிடப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் முதுகில் குத்தியதை உணர்ந்தார் அனிதா. உச்சபட்ச நீதி அமைப்பு கை கழுவியது அனிதாவை குலைத்து விட்டது.
தன் நாடே தன்னை ஏமாற்றி விட்டது, தான் வருடம் முழுதும் கஷ்டப்பட்டு படித்து பெற்ற மதிப்பெண்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது, இந்த அரசுகளை நம்பி வாழ முடியுமா என மனம் நொந்து தன்னை மாய்த்துக் கொண்டார் அனிதா.
அனிதாவின் மரணம் தான், அதுவரை அரசியல் பக்கம் பார்வையை திருப்பாமல் இருந்த இளைஞர்களை அரசியல் மயப்படுத்தியது. போராடா விட்டால் தங்கள் உரிமைகள் பறிபோகும் என்ற எண்ணம் வந்தது. " தகுதி" என்ற பெயரில் ஏமாற்று வேலைகள் நடப்பதை உணர்ந்தனர். நீட் தேர்விற்கு எதிரான அலை தோன்றியது.
இந்தி மொழி திணிக்கப்பட்டால் தன் தாய் மொழி தமிழ் அழிந்து விடும் என்ற எண்ணத்தில் தான், தன்னை தீயிட்டு எரித்துக் கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினார் மொழிப் போர் தியாகி "கீழப்பழூர் சின்னசாமி". கீழப்பழூரும் அரியலூர் மாவட்டம் தான், அனிதாவின் ஊரான குழுமூரும் அரியலூர் மாவட்டம் தான்.
அனிதா தனக்காக மட்டும் அந்த 'இறுதி' முடிவை எடுக்கவில்லை. அனிதா ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில் தெளிவாக சொல்லியிருப்பார்,"என்னை போன்று மற்ற மாணவர்களும் பாதித்து விடக் கூடாது என்று தான் போராடுகிறேன்", என்று. எதிர்கால மாணவர்களின் நிலை உணர்ந்து தான் அந்த முடிவை எடுத்திருக்கிறார். நீட் தேர்வை கொளுத்தும் 'தீப்பந்தமாய்' மாறி இருக்கிறார்.
தமிழ் காக்க போராடிய கீழப்பழூர் சின்னசாமி போல தான், சமூகநீதி காக்க போராடிய அனிதாவும்.
நீட் தேர்வை ஒழிப்பதே அனிதாவின் தியாகத்திற்கான மரியாதையாக அமையும். நீட் தேர்வை ஒழித்து, அனிதாவை போன்ற கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயிலும் காலம் வரை போராடுவோம். அனிதாவை மனதில் தாங்குவோம், போராடுவோம்.
அனிதாவுக்கு வீர வணக்கம்!