அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதியளித்த சூழலிலிருந்து தமிழக அரசியலில் வெவ்வேறு பரபரப்புகள் தொற்றிக் கொண்டுள்ளன. இந்த நிலையில், தனது தோழமைக் கட்சிகளுக்கான சீட்டுகளின் எண்ணிக்கையையும் தொகுதியையும் டிசம்பர் மாதத்திற்குள் முடித்துவிட்டு ஜனவரியில் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட திமுக தலைமை திட்டமிட்டிருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் பரபரப்பாகி வருகிறது.
முதலில் காங்கிரஸுக்கான சீட் எண்ணிக்கையையும் தொகுதியையும் இறுதி செய்திட வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் சமீபத்தில் அறிவாலயத்துக்குக் காங்கிரஸை அழைத்தது திமுக தலைமை. அதனடிப்படையில்தான் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் அறிவாலயம் சென்றனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் திமுக தருவதாகச் சொன்ன எண்ணிக்கைக்கும், தங்களின் எதிர்பார்ப்பு இதுதான் என காங்கிரஸ் கேட்ட எண்ணிக்கைக்கும் பெரிய இடைவெளி இருந்ததால் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை. கட்சித் தலைமையிடமும், மூத்த தலைவர்களிடமும் கலந்து பேசிவிட்டு மீண்டும் வருகிறோம் எனச் சொல்லி அறிவாலயத்திலிருந்து கிளம்பி விட்டனர் காங்கிரஸ் தலைவர்கள்.
தற்போது கே.எஸ்.அழகிரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் காங்கிரஸார் மீண்டும் அறிவாலயம் செல்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, அழகிரிக்கு கரோனா என்பதால் அறிவாலயமும் கலக்கமடைந்திருக்கிறதாம்.