Skip to main content

எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே குறிக்கோள்... மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

 

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருப்பரங்குன்றம் தொகுதியில் புதன்கிழமை விரகனூர் கோழிமேடு பகுதியில் திரண்டிருந்த பெண்கள், தொழிலாளர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். 

 

thiruparankundram by election mk stalin campaign



அப்போது அவர், கடந்த திருப்பரங்குன்றம் தேர்தல் வேட்புமனுவில் அ.தி.மு.க.வினர் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கியது போல் ஒரு நாடகத்தை நடத்தினர். அந்த தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அப்போது வேட்பாளர் சரவணன் நீதிமன்றத்திற்கு சென்றார். ஜெயலலிதாவின் கைரேகையை சுயநினைவோடு வாங்கவில்லை என்று தெரிவித்தார். அந்த வழக்கில், போஸ் இறந்த பிறகு தீர்ப்பு வந்தது. அது சரியான கைரேகை இல்லை. ஜெயலலிதா சுயநினைவோடு அந்த கைரேகையை வைக்கவில்லை. எனவே இந்த தேர்தல் செல்லாது. போஸ் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுகிறது என்று திட்டவட்டமாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

 

ஜெயலலிதா சுயநினைவு இல்லாத போது அவரை ஏமாற்றி வேட்புமனு தாக்கல் செய்து ஒருவர் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இது தான் அந்த கட்சியின் லட்சணம். அந்த காரணத்தினால் தான் திருப்பரங்குன்றத்திற்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. கடந்த 5 ஆண்டில் 10 கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என்று பிரதமர் மோடி சொன்னார். ஆனால் ஒருவருக்கு கூட வேலை கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். வங்கியில் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்று சொன்னார். அதை செய்தாரா, செய்யவே இல்லை. உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் மோடிக்கு கவலை இல்லை.
 

புயலினால் பாதிக்கப்பட்ட நமது தமிழக மக்கள் இன்னும் சகஜமான நிலைக்கு வரவில்லை. ஆனால் பிரதமர் மோடி தமிழக மக்களை சந்தித்து ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. இப்போது அவர் தமிழகத்திற்கு வருகிறார் என்று சொன்னால் ஓட்டுகளை பெறுவதற்கு மட்டுமே.
 

தூத்துக்குடி போராட்டம் 100-வது நாளை எட்டிய போது ஒரு பேரணி நடத்தினார்கள். அப்போது கலவரத்தை ஏற்படுத்தி அவர்களை காக்கை குருவிகளை சுட்டுத்தள்ளுவது போல் சுட்டுத்தள்ளியது இந்த அரசு. அதில் 13 பேர் இறந்து போனார்கள். அந்த சம்பவத்திற்கு ஒரு ஆறுதல் செய்தியோ, வருத்தமோ முதல்-அமைச்சரோ, பிரதமரோ தெரிவிக்கவில்லை. ஒரு துக்க செய்தி கூட அவர்கள் வெளியிடவில்லை.

 

எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே குறிக்கோள் தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான். நீங்கள் எப்படி பிரதமரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்து வாக்களித்து உள்ளர்களோ, அதே போல் எடப்பாடி பழனிசாமியையும் நிராகரிப்பதற்கு இந்த இடைத்தேர்தலில் வாக்களியுங்கள்.
 

ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் சட்டமன்றத்தில் போதுமான உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இனிமேல் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைக்கப் போவது இல்லை. எனவே வருகிற 23-ந் தேதி தேர்தல் முடிவுக்கு பின்னர், தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.
 


 

சார்ந்த செய்திகள்