Skip to main content

''கும்பகர்ண தூக்கத்தை கைவிட்டு விட்டு உடனடியாக இதை தடுத்து நிறுத்துங்கள்''-இபிஎஸ் வலியுறுத்தல்   

Published on 25/09/2022 | Edited on 25/09/2022

 

"Stop this immediately by giving up kumbakarna sleep" - insists EPS

 

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் ஆந்திராவின் முயற்சிகளை உடனடியாக தமிழக அரசு தடுக்க வேண்டும் என அதிமுகவின் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக எல்லையில் உள்ள ஆந்திர மாநிலம் குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அணி மிகனிபள்ளே என்ற இடத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் அம்மாநில முதலமைச்சர் பேசும்போது தமிழகம் மற்றும் ஆந்திரா எல்லையில் கனகதாச்சி அம்மன் கோயில் அருகே இருக்கும் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் சேகரிக்கும் அளவை உயர்த்தப் போவதாகக் கூறியுள்ளார். இதற்காக 120 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாகவும் அறிவித்துள்ளார். குடிப்பள்ளி என்ற இடத்திலும், சாந்திபுரம் என்ற இடத்திலும் நீர்த்தேக்கங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக 250 கோடி ஒதுக்கி கொள்வதாகவும் ஆந்திர முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆந்திர முதலமைச்சரின் இந்த அறிவிப்புகளால் தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

வட தமிழகத்தின் ஜீவாதாரமான பாலாறு மூன்று மாநிலங்களுக்கிடையே பாய்கிறது. கர்நாடகத்தின் நந்திதுர்கா மலையில் உருவாகி ஆந்திராவில் 93 கிலோ மீட்டர் தூரம் பயணித்து அம்மாநிலம் குப்பம் மாவட்டத்தில் 33 கிலோ மீட்டர் பயணிக்கிறது. பின்பு நம் தமிழகத்தின் வாணியம்பாடி அருகே புல்லூரில் தடம் பதிக்கிறது. சென்னை அடுத்த கல்பாக்கம் அருகே வயலூரில் கடலில் கலக்கிறது. ஆண்டுதோறும் பாலாற்றில் குறைந்தபட்சம் 80 டி.எம்.சி தண்ணீர் உற்பத்தி ஆகிறது என்று அளவீடுகள் தெரிவிக்கின்றன. இதில் கர்நாடகா 20 டிஎம்சியையும், ஆந்திரா 20 டிஎம்சியையும், தமிழகம் 40 டிஎம்சி தண்ணீரையும் பங்கிட்டு கொள்ள வேண்டும் என்பது மூன்று மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தம். ஆனால் தற்போது கூடுதல் நீர்த்தேக்கம் கட்ட ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். ஆந்திர அரசின் இந்த அதிரடி திட்டம் குறித்து நன்கு அறிந்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினும், நீர்வளத் துறையும் எதிர்ப்பு தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை. திராவிட மாடல் திராவிடம் மாடல் என்று சொல்லி தமிழக மக்களை திசை திருப்பும் போக்கை அரசு விடுத்து, கும்பகர்ண தூக்கத்தை கைவிட்டு விட்டு உடனடியாக ஆந்திர அரசின் இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்