காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.
1973ம் ஆண்டு காங்கிரசில் பாலசா பகுதி செயலாளராக பணியாற்றினார். படிப்படியாக முன்னேறி கட்சியின் முக்கிய தலைவராக உருவானார். இளைஞர் காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், ஜம்முகாஷ்மீர் முதல்வர் என பல பதவிகளில் இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைமை விவகாரத்தில் குலாம் நபி ஆசாத்துக்கும் தலைமைக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மோதல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குலாம் நபி ஆசாத்துக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மீண்டும் கொடுக்காததால் இவருக்கும் காங்கிரஸ் கட்சிக்குமான மோதல் மிகத் தீவிரமானது. இதனைத்தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்வது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுதல் உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளார்.
சில தினங்கள் முன்பு பிரச்சார குழுவில் தரப்பட்ட பொறுப்பில் இருந்து அன்றே குலாம் நபி ஆசாத் தனது உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகினார். தற்போது காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.. இது தொடர்பாக தன் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு தெரிவித்துள்ளார். மேலும் ராஜினாமாவுக்கான காரணத்தை எங்கும் குறிப்பிடவில்லை. எனினும் ராஜினாமா உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகிய நிலையில் குலாம் நபி ஆசாத்தும் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது