நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நேற்று முன்தினம் (27.10.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய் பல்வேறு கருத்துகளை முன்வைத்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், “ஊழல் எல்லாரும் வாழ்க்கையில் பழகிப் போய் அது ஒரு வைரஸ் மாதிரி உள்ளது. அதனை 100% ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை. வேற வழி இல்லை அதனை ஒழிக்க வேண்டும். ஆனா அது வேற கதை. இனவாத சக்திகளைக் கூட நாம் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.
மதம் பிடித்த யானை மாதிரி இந்த ஊழல் இருக்கிறது. இந்த ஊழல் எங்கே ஒளிந்து இருக்கு எப்படி ஒளிந்து இருக்கு. எந்த வடிவத்தில் ஒளிந்து இருக்கு என்று கண்டுபிடிக்கவே முடியாது. கருத்தியல் பேசிக் கொள்கையை நாடகம் போடும், கலாச்சார பாதுகாப்பு வேஷமும் போடும். ஊழலுக்கு முகம் இருக்காது. முகமூடி தான் இருக்கும். முகமூடி தான் இருக்குமே தவிர முகமே இருக்காது. முகமூடி போட்ட கரப்ஷன் கபடத்தார்கள் இப்போது கூட நம்மோடு இருந்து கொண்டு இப்போது இங்கு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். நம்முடைய ஒரு எதிரி இனவாத சக்திகள். நம்முடைய இன்னொரு எதிரி ஊழல் கபடத்தாரர்கள். மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். இங்கு யார் வரவேண்டும் யார் வரக்கூடாது” எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம், செய்தியாளர் ஒருவர் ‘திமுக ஊழலுடைய முகம்’ என்று விஜய் கூறியுள்ளார் எனக் கேள்வி எழுப்பினார். அதற்குத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‘இதற்கு எல்லாம் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பதில் சொல்லிவிட்டார். எனவே அதற்கு மேல் பதில் சொல்ல விரும்பவில்லை” எனப் பதிலளித்தார்.