நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரின் ரவுடித்தனமான அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினரையே தாக்க முற்படும் சட்டமன்ற உறுப்பினர் முன்னால் சாதாரண மக்கள் எம்மாத்திரம் என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் AKP. சின்ராஜ் தன்னுடைய பணிகளை நேர்மையாக தொடர்ந்து செய்து வருகிறார் என்பதை நாமக்கல் தொகுதி மக்கள் அறிவர். மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்களை இடைவிடாமல் ஆய்வு செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியாக திட்டப்பணிகளை ஆய்வு செய்து தரம் குறைவாக இருந்தால் உடனடியாக அதிகாரிகளிடத்தில் சொல்லி அதை நிவர்த்தி செய்து வருகிறார். அந்த வழியில் நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமக்கல் ஒன்றிய திட்டப்பணிகளை இன்று (28.05.2020) ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பணிகளில் நிறைய குறைபாடுகள் இருக்கின்ற காரணத்தினால், அதை நாடாளுமன்ற உறுப்பினர் வெளிக்கொணருவதை தடுப்பதற்காக நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் KPP.பாஸ்கர் திட்டமிட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் நாமக்கல் சட்டமன்ற தொகுதியில்தான் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தை மக்கள் அளித்திருந்தார்கள். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினரின் செயல்பாடுகளுக்கு எதிராக விழுந்த வாக்குகள்தான் அந்த வாக்குகள்.
AKP. சின்ராஜ்
அப்போதிருந்தே பாஸ்கர் ஒரு வெறுப்போடும், பகையோடும் இருந்தார் என்பது உண்மை. மற்ற தொகுதிகளில் ஆய்வு செய்யும் போதே என் தொகுதியில் வந்து செய்து பார்க்கட்டும் என்று சவால் விட்டுக் கொண்டிருந்ததாகவும் நாங்கள் கேள்விப்படுகிறோம். அதனால் இன்று நடந்த நாமக்கல் ஆய்வு கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பதற்காக தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து முயற்சி செய்து இருக்கிறார்.
அது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த பின்னால் அரசு பயணியர் மாளிகையில் மதிய உணவு அருந்திக் கொண்டு இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் அவருடன் இருக்கின்ற அவரது கட்சிக்காரர்களோடு நேரடியாக வந்து இந்த கடிதத்தில் பதிவு செய்ய முடியாத வார்த்தைகளால் தனிப்பட்ட முறையில் திட்டியிருக்கிறார். பிறகு அங்கிருந்த பாட்டில் மற்றும் செல்போன்களை எடுத்து உடைத்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினரை தாக்க வந்திருக்கிறார். இந்த நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினருடைய பணிகளை தடுப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையே அடிப்பதற்கு தயக்கமில்லாமல் துணிகிறார் என்றால் சாதாரண மக்களுடைய நிலைமை என்ன. நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.