
நக்கீரன் மார்ச் 25 இதழில், ‘சட்டமன்றத் தேர்தல் 2021 – 234 தொகுதிகளில் யார் முன்னிலை? பண விநியோகத்துக்கு முன் கள நிலவரம்!’ என்னும் தலைப்பில், கவர் ஸ்டோரி வெளியிட்டு, நக்கீரன் டீம் எடுத்த சர்வே விபரங்களை வெளியிட்டுள்ளோம். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி வேட்பாளர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தி, நக்கீரன் இதழில் ‘கள நிலவரம்’ வெளிவந்திருக்கும் நிலையில், நக்கீரன் இணையதள வாசகர்களுக்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி குறித்த விரிவான கட்டுரை இதோ:
மாதவராவ் (காங்கிரஸ்) – மான்ராஜ் (அதிமுக)
ஐந்து தடவை ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தாமரைக்கனி. தொகுதி மறு சீரமைப்பில் தனித் தொகுதியான பிறகு, ஆளுமை மிக்க எம்.எல்.ஏ. யாரும் இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை. இத்தேர்தலில் போட்டி என்பது, திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவுக்கும் அதிமுக வேட்பாளர் மான்ராஜுக்கும்தான்.

சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ. சந்திரபிரபாவுக்கு சீட் மறுக்கப்பட்டு ஒதுங்கிவிட்டதால், அவர் தரப்பிலிருந்து மான்ராஜுக்கு ஒத்துழைப்பு என்பதே இல்லை. பக்கத்து தொகுதியான ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போட்டியிடுவதால், ஆளும்கட்சியினரின் மொத்த உழைப்பும் மான்ராஜுக்கு கிடைக்கவில்லை. அமமுக வேட்பாளர் சங்கீதப்ரியா பிரிக்கும் முக்குலத்தோர் வாக்குகள், இவருக்குப் பலவீனம். கரோனா ஊரடங்கின்போது, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையிலும், இரண்டு மடங்கு, மூன்று மடங்கு விலையில் கள்ள மார்க்கெட்டில் தாராளமாக பாட்டில்கள் சப்ளையான பின்னணியில் இவர் இருந்ததாக எதிரணியினரின் பிரச்சாரத்தில் எடுத்துவிடப்படுகிறது. சிரிப்புக்கும் இவருக்கும் தூரம். முகத்தில் வெளிப்படும் இறுக்கம், பணம் செலவழிப்பதிலும் இருப்பதால், தேர்தல் பணியில் ஆளும்கட்சியினருக்கே உரித்தான வேகத்தை, இத்தொகுதியில் பார்க்க முடியவில்லை.
போட்டியிடும் வேட்பாளர்களில் மக்களால் கவனிக்கப்படுபவராக இருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ். அரசியல் பின்னணி உள்ள இவருக்கு, ஒரு ஒன்றியம் முழுவதும் சொந்தபந்தங்களின் வாக்குகள் கணிசமாக இருக்கின்றன. ‘சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை; சேர்த்து வைத்ததை செலவழிப்பதற்காகவே தேர்தலில் நிற்கிறேன். எம்.எல்.ஏ. ஆவதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை மக்களுக்கே செலவழிப்பேன்’ என்று இவர் கூறுவது, ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.
தொகுதி சாதகமாக இருந்தும், கரோனா தொற்று ஏற்பட்டு மாதவராவ் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தந்தையின் வெற்றிக்காக மகள் திவ்யா தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். நாம் தமிழர் – அபிநயா பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் – குருவையா (ஓய்வுபெற்ற நீதிபதி), புதிய தமிழகம் – சாந்தி போன்றவர்களும் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர்.