தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க. தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் கலந்து கொண்டனர். முதல் நாள் பிரச்சார கூட்டத்திலேயே கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்காததால் கூட்டணி கட்சிகளுக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் 27ஆம் தேதி (நேற்று) நடைபெறும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.
முதலில் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளான பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சி தலைவர்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வந்தது. அதே நேரத்தில் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க.வில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பிரச்சனைகள் இதுவரை களையப்படவில்லை.
அதாவது, கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க., அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்றுக் கொள்ளவில்லை.
தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் உள்பட அனைத்து தலைவர்களும் அ.தி.மு.க. வேண்டுமென்றால், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கலாம். எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை டெல்லி பா.ஜ.க. மேலிடம் தான் அறிவிக்கும். அ.தி.மு.க.வால் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது என்றும் கூறி வருகின்றனர்.
இன்றுவரை அவர்கள் எந்த இடத்திலும் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொள்ளவில்லை. அது மட்டுமல்லாமல் அ.தி.மு.க. ஊழல் குறித்தும் வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக பா.ஜ.க. துணைத் தலைவர், பொங்கல் பண்டிகைக்காக ரூ.2500 வழங்குவது குறித்து விமர்சித்து இருந்தார். இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் தொடர்ந்து ஒரு இறுக்கமான சூழ்நிலை இருந்து வருகிறது. அதற்கு அ.தி.மு.க. அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். அவர் தலைமையில்தான் சட்டப்பேரவை தேர்தலை சந்திப்போம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பா.ஜ.க.வின் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் கூறி வருகின்றனர். இந்தப் பிரச்சனையால் பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.
அதே நேரத்தில், அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. மேலிடம் தரப்பில் இருந்து அ.தி.மு.க.விற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. கூட்டணியில் உள்ள பா.ம.க.வும் தங்களுக்குத் துணை முதல்வர் பதவி தர வேண்டும். அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளது.
இந்த விஷயத்தில் கூட்டணி கட்சியினர் பிடிவாதமாக இருக்கிறார்கள். தே.மு.தி.க.வும், ஜெயலலிதா இருந்தபோது எங்களுக்கு 41 தொகுதிகளை ஒதுக்கினார். அதைவிட கூடுதலான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று டிமாண்ட் செய்து வருகின்றனர். எங்கள் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம் என்றும் கூறி வருகின்றனர்.
கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட் என்பது உறுதி செய்யப்படாத நிலையிலும், கூட்டணி கட்சிகள் பிடிவாதமாக இருந்து வரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று காலை நடந்தது.
கூட்டத்துக்கு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். அவைத்தலைவர் இ.மதுசூதனன், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். ஆனால், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
அதேபோல் த.மா.கா.வில் இருந்தும் யாரும் பங்கேற்கவில்லை. தொகுதி பிரச்சனை காரணமாகத்தான் கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால்தான் அவர்கள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்காதது அ.தி.மு.க. தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் நாள் பிரச்சார கூட்டத்திலேயே கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்காததால் பிரச்சனை வெடித்துள்ளது.
பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை சந்தித்திருக்கிறது. இன்றைக்கு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சில புல்லுருவிகள், துரோகிகள் இயக்கத்தை உடைக்க முயற்சி செய்தார்கள். அதையும் இங்கே இருக்கின்ற நிர்வாகிகள், தொண்டர்கள் ஒத்துழைப்போடு தவிடு பொடியாக்கினோம். இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி இருக்கலாம், ஓ.பி.எஸ். இருக்கலாம், நாளைக்கு நீங்கள் முதல்வராக வரலாம், இங்கே என் முன்னால் அமர்ந்திருக்கின்றவர்கள், இன்னமும் மூலை முடுக்கில் உள்ள எத்தனையோ தொண்டர்கள், நிர்வாகிகள் எம்.எல்.ஏ., எம்.பி. ஆகலாம், அமைச்சர் ஆகலாம், ஏன், முதல்வராகக்கூட ஆவதற்கு வாய்ப்புள்ள ஒரே இயக்கம் அ.தி.மு.க. இயக்கம். அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து ஜெயலலிதா அரசு தொடர பாடுபடுவோம்” என்றார்.
ஓ.பி.எஸ். பேசுகையில், “மக்களிடம் நமக்கு எந்த கெட்ட பெயரும் இல்லை. நல்ல பெயரை வாக்குகளாக கொண்டு போய் சேர்க்கின்ற கடமை அ.தி.மு.க.வின் ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்றார். கே.பி.முனுசாமி பேசுகையில், “2021 சட்டமன்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
50 ஆண்டு காலம் வழி நடத்திய தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இல்லை. இவர்களை எதிர்த்து நின்று அரசியல் செய்த கலைஞரும் இன்று இல்லை. அரசியல் ரீதியாக எதிரும், புதிருமாக போர் களத்தில் நின்ற தலைவர்கள், இந்த தேர்தல் களத்தில் இல்லாததால், எப்படியாவது இடையில் புகுந்து வெற்றி பெற்றுவிடலாம் என்று பலர் கணக்கு போடுகிறார்கள்.
கடந்த 50 ஆண்டாக தமிழகத்தில் எந்த தேசிய கட்சியையும் உள்ளே நுழையவிடாமல் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. தேசிய கட்சிகளுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். கூட்டணியில் எந்த தேசிய கட்சிகளும், மாநில கட்சிகள் வந்தாலும் அ.தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி. இதில் கூட்டணி ஆட்சி என்பதற்கு இடமே இல்லை. தேவையும் இல்லை.
எனவே கூட்டணி ஆட்சி அமைப்போம், அமைச்சரவை அமைப்போம் என்ற எண்ணத்தோடு கூட்டணிக்கு வரும் அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டாம்” என்றார்.
பா.ஜ.க. தலைவர்கள் பலர், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் நடைபெறும் என்றும் கூறி வந்தனர். அண்மையில் பா.ஜ.க.வின் அண்ணாமலை, எச்.ராஜாவை அமைச்சராக்குவோம் என்று பேசி அதிர்ச்சியை கொடுத்தார். பா.ம.க., துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்றும் கூறி வருகிறது. இந்த நிலையில் கே.பி.முனுசாமி மறைமுகமாக பா.ஜ.க.வையும், பா.ம.க.வையும் தாக்கியுள்ளது கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.