கர்நாடகாவில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சியிலிருக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று (26.04.2023) மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சிக்கொடி என்ற இடத்தில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், "ராகுல் காந்திக்கு 50 வயதாகிறது. ஆனால் அவரது மனநிலை 5 வயதை போன்று உள்ளது. நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதித்த போது பிரதமர் மோடியை குற்றம் சாட்டினார். அவருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவர் வாக்குறுதிகளை அளிக்கும் அளவிற்கு திறமையானவரா" என கேள்வி எழுப்பி உள்ளார்.