அண்மையில் நாமக்கல்லைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தங்கமணி, ''பழிவாங்கும் நோக்கத்தோடு நடைபெற்ற இந்த சோதனைக்கு முழு காரணம் செந்தில் பாலாஜிதான். செந்தில் பாலாஜியை பொறுத்தவரை என்னை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதற்காக செய்கின்றார். ஆயிரம் செந்தில் பாலாஜி வந்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு சட்டத்தின் மீது, ஆண்டவனின் மீது, நீதி மீது நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக நான் வெற்றிபெறுவேன்'' என்றார்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ''இந்த சோதனை தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு கருத்து வெளியிடப்பட்டிருக்கிறது. தங்கமணி செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு கருத்தைச் சொல்கிறார். மூன்று பேருக்குள்ளும் முரண்பட்ட கருத்துக்கள் இருக்கிறது. மூனு பேரும் பேசி முடிச்சு ஒரு நிலைப்பாட்டுக்கு வந்து உண்மையான காரணத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரு அரசியல்வாதி, கொள்ளையடித்த பணத்தைக் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் வழக்கைச் சந்தித்தவர் தங்கமணிதான். அவர் மின்துறையை நிர்வகித்த காலங்களில் 2.38 லட்சம் டன் நிலக்கரியைக் காணவில்லை. தூத்துக்குடியிலும் நிலக்கரி காணாமல் போயிருக்கிறது. ஏறத்தாழ 3 லட்சம் டன் நிலக்கரியைக் காணவில்லை. கண்ணுக்குத் தெரிந்த நிலக்கரி காணவில்லை... கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருக்கிறார்கள்'' என்றார்.