18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று நேற்று (01-06-24) 6 மணியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘2024 மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்து ஜூன் 4 அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்குகிற போது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். தபால் வாக்குகள் எண்ணி முடிந்த பிறகுதான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட வேண்டும். தபால் வாக்குகள் எண்ணிக்கையை எந்த காரணம் கொண்டும் தாமதப்படுத்தாமல் விரைவாக எண்ணி அதனுடைய முடிவுகளை உறுதி செய்ய வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பேட்-ஐ எண்ணுவதற்கு முன்பாக இயந்திரங்களில் இருக்கும் சீல்கள் சரியாக இருக்கிறதா என்பதை வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து படிவம் 17 சி-இல் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். 17 சி படிவத்தில் உள்ள பதிவான வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒத்துப்போகிறதா என்பதை ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும். எந்த வாக்குப்பதிவு இயந்திரத்திலாவது சீல்கள் சேதமடைந்திருந்தாலோ, இயந்திரத்தின் எண் ஒத்துப்போகவில்லை என்றாலோ அந்த இயந்திரத்தை அனுமதிக்காமல் தனியாக ஒதுக்கி வைக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிற போது இது குறித்த தேர்தல் ஆணைய கையேடுகளையும், அதற்குரிய சட்ட புத்தகங்களையும் எடுத்துச்செல்வதோடு அதுபற்றிய முழு விபரங்களை அறிந்துகொள்ள வேண்டும். எனவே வாக்கு எண்ணும் மையங்களுக்குக் காலை 6 மணிக்கெல்லாம் சென்று எந்த விதமான தவறுகளும் நடக்க வாய்ப்பளிக்காமல் முகவர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில் 43 கட்டிடங்களில் உள்ள 234 அறைகளில் நடைபெறுகிறது. ஒரு வாக்கு எண்ணிக்கை அறையில் 16 க்கும் மேற்பட்ட மேஜைகள் போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் மேஜைகள் தனியாகப் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அப்படி வாக்குகள் எண்ணப்படுகிற மேஜையில் துணை தேர்தல் அதிகாரியோடு வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அமருவதற்கு உரிமை இருக்கிறது. அந்த உரிமையை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கக் கூடாது. மிகுந்த விழிப்புணர்வோடு காலை 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைகிற வரை வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.