இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தனர்.
அதே வேளையில், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைத்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (27-01-24) அவரது கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதன்படி, முதற்கட்ட முதல் 3 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்தார்.
அந்த வகையில், திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக பா.சத்யாவையும், தென்காசி தொகுதி வேட்பாளராக மயிலை ராஜனையும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக மரிய ஜெனிபரையும் அவர் வேட்பாளராக அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் எப்போதும் யாருடனும் கூட்டணி இல்லை. என் மக்களை ரொம்ப நேசிக்கிறேன். நம்புகிறேன். நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தொகுதியிலும் நான் போட்டியிடவில்லை. சட்டமன்றத் தேர்தலில் நான் உறுதியாக போட்டியிடுவேன். மோடி பிரதமராவதை தடுக்கக்கூடிய வலிமை எங்களிடம் இல்லை. ஆனால், காங்கிரஸ், பா.ஜ.க.வை தமிழகத்திற்குள் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறினார்.