சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. சாலைகள், குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அம்மா உணவங்கள் மூலமும் உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.
மேலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சில அரசியல் பிரமுகர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். அதே போல் கொளத்தூர் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட சென்றிருந்தார். அங்கு மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தண்ணீரில் நிற்கும் நிலையில், அந்த இடத்தில் படகில் சென்றவாறு வெள்ளப்பாதிப்பை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பார்வையிடும் காட்சி, சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிற சூழலில் பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் அதை பற்றிய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை தி.நகரில் தனியார் அறக்கட்டளை சார்பில் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கனிமொழி. அதன் பின்பு செய்தியாளர்கள் சந்தித்த அவர் பேசியதாவது, “பலமுறை சென்னை இந்த பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. ஆனால் இது ஒரே நாளில் உருவாக்கப்பட்ட பிரச்சனையும் கிடையாது. நீர் வழி பாதைகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கிறது. அதனால் நீர்வழி அடைப்படும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. சென்னை மட்டும் இல்லை இப்ப தூத்துக்குடியிலும் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல குழப்பங்கள் இருக்கிறது.
இதையெல்லாம் சரி செய்வதற்காக ஒரு முழுமையான திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்பட வேண்டும். அதை நிச்சயமாக முதலமைச்சர் செய்வார். அதன் பின்பு அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதே போல் மழைக்காலத்தில் மக்களுக்கு உதவி செய்யாமல் அரசியல் செய்வது மிகவும் தவறான ஒன்று. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மழைக்காலம் முடிந்ததும் எங்கு தவறு நடந்தது என்று பேசலாம். ஆனால் மக்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் நேரத்தில் அரசியல் செய்வது நாகரிகமாக இல்லை” எனத் தெரிவித்தார்.