புதுச்சேரி பாமக நிர்வாகிகள் கூட்டம், புதுச்சேரி அருகேயுள்ள மொரட்டாண்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குக் கட்சி நிறுவனர் இராமதாஸ் தலைமையேற்று உரையாற்றினார்.
அவர் பேசியதாவது, “புதுச்சேரி மாநிலத்தில் தொடக்க காலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று கட்சியை வளர்த்தேன். ஆனால் நாம் ஆட்சியைப் பிடிக்காததும், தனியாக நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாததும் வருத்தமளிக்கிறது. நமது உழைப்பு அனைத்தும் விழலுக்கு (நாணல்) இரைத்த நீராகிவிட்டது.
சிறிய மாநிலம் புதுச்சேரியில் 4 அல்லது 5 தொகுதிகளில் நின்று வெற்றிபெறும் அளவிற்கு கட்சியினர் வேலை செய்யவில்லை. ஏற்கனவே கூட்டணியில் இருந்தபோது, நளினமாக திமுகவை விமர்சனம் செய்வேன்; அதற்கு கலைஞர், தைலாபுரத்தில் இருந்து தைலம் வருகிறது என பதில் சொல்வார். அதேபோல புதுச்சேரிக்கு அதிக அளவில் தைலம் அனுப்பினேன். ஆனால் அதை தலையில் தடவிக்கொண்டு படுத்துக்கொண்டீர்கள். சரியாக கட்சிப் பணி செய்யவில்லை. இந்தப் புதுச்சேரியில் என்னைக் கொலை செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் பாதுகாவலர்களால் தப்பித்தேன்.
புதுச்சேரியில் மீண்டும் கட்சி புத்துயிர் பெற்று தனித்து நின்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும். அதற்கு முதலில் 6 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற வேண்டும். கட்சியில் அதற்காக நிர்வாகிகள் மாற்றத்தையும் அறிவிக்கிறேன். மாற்றம் செய்த பிறகு காரைக்காலில் 2, புதுச்சேரியில் 4 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற வேண்டும். வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரமும், சமூக ஊடகங்களின் மூலமும் பிரச்சாரம் செய்ய வேண்டும்" என்றார்.
கூட்டத்தில், புதுச்சேரி மாநில அமைப்பாளராக இருந்த திண்டிவனம் மக்களவை முன்னாள் உறுப்பினர் கோ. தனராஜ், புதுச்சேரி மாநில அரசியல் ஆலோசனைக் குழு தலைவராக மாற்றப்பட்டார். அதையடுத்து புதிய மாநில அமைப்பாளராக மணவெளி பகுதியைச் சேர்ந்த கணபதி நியமிக்கப்பட்டார். மேலும், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக வடிவேல், துரை, மதியழகன், பிரபாகரன் ஆகியோரை ராமதாஸ் நியமித்து அறிவிப்பு வெளியிட்டார். இந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.